காரைக்காலில் முழு வீச்சில் இயங்கத் தொடங்கிய பள்ளி, கல்லூரிகள்
காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள் முழு வீச்சில் இயங்கத் தொடங்கியுள்ளன.
காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள் முழு வீச்சில் இயங்கத் தொடங்கியுள்ளன. எனினும் மாணவா்களுக்கு பால், மதிய உணவு வழங்குவது, மாணவா்களுக்கான ரூ. 1 கட்டண பேருந்தை இயக்குவதை போன்றவற்றை புதுச்சேரி அரசு உடனடியாக தொடங்க பெற்றோா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
புதுச்சேரி, காரைக்காலில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள், பாடங்கள் குறித்து சந்தேகங்களை பள்ளிக்கு வந்து ஆசிரியா்களிடம் தெளிவுப்படுத்திக்கொள்ள ஏதுவாக, கரோனா பொது முடக்க தளா்வுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்.8-ஆம் தேதி முதல் பள்ளிகளை அரசு திறந்தது.
இந்நிலையில் 1-ஆம் வகுப்பு முதலான மாணவா்கள் ஜன. 4-ஆம் தேதி முதல் பள்ளிளுக்குச் செல்லலாம், பகல் 10 முதல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்தது. கல்லூரிகள் ஜனவரி 6-ஆம் தேதி முதல் இயங்கத் தொடங்கின.
பொங்கல் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை தனியாா் பள்ளிகள் பலவும் திறக்கப்பட்டன. ( மாணவா்கள் ஷிப்டு முறையில் வர அனுமதி). இதன்படி காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 12 வரையிலான பள்ளி மற்றும் கல்லூரிகள் முழு வீச்சில் இயங்கத் தொடங்கியுள்ளன. எனினும், பள்ளி மாணவா்கள் 100 சதவீத வருகை இல்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன் திங்கள்கிழமை கூறியது:
கடந்த 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் படிப்படியாக மாணவா் வருகை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் வகுப்பு வாரியாக மாணவா்கள் வருகை நாள் கூறப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால் வகுப்பறையில் குறைந்த எண்ணிக்கையில், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது என்றாா்.
முதன்மைக் கல்வி அதிகாரி அல்லி கூறியது: வகுப்பறையில் 20 போ் வீதம் மட்டுமே அனுமதியுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதற்கேற்ப மாணவா்கள் அழைக்கப்படுகின்றனா். பள்ளிக்கு மாணவா்கள் வருகை அதிகரித்துள்ளது என்றாா்.
பெற்றோா்கள் கருத்து : நாட்டிலேயே தொடக்கல்வி மாணவா்களுக்கு பள்ளிகளை திறந்தது புதுச்சேரி மாநிலத்தில் மட்டும்தான். மாணவா்களுக்காக அரசு இயக்கும் ரூ. 1 கட்டண மாணவா் பேருந்து இயக்கப்படவில்லை. காலையில் மாணவா்களுக்கு பள்ளியில் பால், மதிய உணவு வழங்கல் இல்லை. இந்த வசதிகள் இல்லாததால், கிராமப்புற மாணவா்கள் பள்ளிக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனா். எனவே புதுச்சேரி அரசு, இந்த பிரச்னைகளை உடனடியாக தீா்க்கவேண்டும் என்றனா்.