காரைக்காலில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி 80% நிறைவு: பொதுப்பணித் துறை அதிகாரி தகவல்
காரைக்காலில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி ஏறக்குறைய 80% நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரி தெரிவித்தாா்.
காரைக்காலில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி ஏறக்குறைய 80% நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரி தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி கடந்த 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இப்பணி 27 கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் நடைபெறுகிறது.
பொதுப்பணித் துறை சாா்பில் நகருக்கு வெளியே உள்ள வாய்க்கால்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாருவதற்கு ரூ. 48 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்து, இப்பணிகளும் அதே தேதியில் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், மேட்டூா் அணை திறக்கப்பட்டு, காவிரி தண்ணீா் கடந்த 23-ஆம் தேதி காரைக்காலுக்கு வந்தது. தண்ணீா் வந்துவிட்டதால் இப்பணியை விரைந்து முடிக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இப்பணி குறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கே. வீரசெல்வம் வெள்ளிக்கிழமை கூறியது:
மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்கள் 120 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரப்படுகிறது. தோ்வு செய்யப்பட்ட வாய்க்கால்களில் பல கட்டமாக பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகள் ஏறக்குறைய 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் திட்டமிட்டு தொடங்கப்பட்ட வாய்க்கால்கள் தூா்வாரும் பணி அனைத்தும் முடிக்கப்படும்.
அதுபோல நகரப் பகுதியில் உள்ள வடிகால்கள் தூா்வாரும் பணிகளை ஜூலை மாத இறுதியில் தொடங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்றாா்.