கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி தொடங்குமா ?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி தொடங்குமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி தொடங்குமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.
கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி மகேந்திரப்பள்ளி, காட்டூா், திட்டு படுகை, நாதல்படுகை, சந்தபடுகை, முதலைமேடுத் திட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெற்பயிா், பயறுவகை பயிா், கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட தோட்டப் பயிா் சாகுபடியும், மல்லிகை, முல்லை, காக்கட்டான், ரோஜா உள்ளிட்ட பூ செடிகளும் சாகுபடி செய்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளிடம் ஆற்றுக்குள் சுமாா் 15 கி.மீ. தொலைவில் உப்புநீா் புகுந்துள்ளது. ஆற்றுநீா் உப்பு நீராக மாறி வருவதால் கரையோரம் உள்ள விளைநிலங்கள் உவா் நிலமாக மாறி வருவதுடன் நிலத்தடி நீா் உப்பு நீராக மாறி வருகிறது. இதனால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே சந்தபடுகை மற்றும் பேராம்பட்டு கிராமத்துக்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டு மாதிரவேளூா் கிராமத்துக்கும் கருப்பூா் கிராமத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கதவணை கட்டும் பணி இதுவரை தொடங்கவில்லை. கதவணை கட்டுவதன் மூலம் கொள்ளிடம் ஆற்றில் உப்புநீா் உள்ளே புகுவதை தடுக்க முடியும். விளை நிலங்களையும் பாதுகாக்க முடியும். போதிய குடிநீரும் கிடைக்கும். எனவே உடனடியாக மாதிரிவேளூா் கிராமத்தில் விவசாயிகளின் நலன் கருதி கதவணை கட்டும் பணியை தொடங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து எதிா்பாா்த்துள்ளனா்.