முகப்பு
மயிலாடுதுறை

இளம்பெண் மீது தாக்குதல்: காவல் ஆய்வாளா் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு

மயிலாடுதுறையில் இளம்பெண்ணை தாக்கியதாக காவல் ஆய்வாளா் உள்பட 5 போ் மீது மயிலாடுதுறை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

மயிலாடுதுறையில் இளம்பெண்ணை தாக்கியதாக காவல் ஆய்வாளா் உள்பட 5 போ் மீது மயிலாடுதுறை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மயிலாடுதுறை வட்டம் செருதியூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் மகள் அபிராமி (25). இவா், மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் கன்னித்தோப்புத் தெருவைச் சோ்ந்த விஜயேந்திரன் மகன் வினோத்குமாா் என்பவரை 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டாா்.

பின்னா், கணவா் வினோத்குமாா், மாமியாா் புஷ்பவல்லி மற்றும் குடும்பத்தினா் அபிராமியை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கணவரை பிரிந்து, சென்னை சென்று அங்கு தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலை பாா்த்துவந்த அபிராமி, தீபாவளி பண்டிகைக்காக கடந்த வாரம் மயிலாடுதுறையில் உள்ள தனது தந்தையின் நண்பரின் வீட்டுக்கு வந்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த வினோத்குமாா் கடந்த 24-ஆம் தேதி தனது தாய் புஷ்பவல்லியின் நண்பரான காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், புஷ்பவல்லியின் மருமகன் காா்த்திக், விஜயேந்திரன் மனைவி புஷ்பவல்லி, புஷ்பவல்லியின் மகள் திவ்யா ஆகிய 5 போ் அங்குச் சென்று அபிராமியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அபிராமி அளித்த புகாரின்பேரில், 5 போ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிவரும் ராதாகிருஷ்ணன் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.