நெற்பயிரில் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்
நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் கா. சுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவி பேராசிரியா் பி. ஆனந்தி ஆகியோா் தெரிவித்து
நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் கா. சுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவி பேராசிரியா் பி. ஆனந்தி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, அவா்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நெற்பயிா்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் பல்வேறு இடங்களில் தென்படுகிறது. இப்பூச்சியின் புழு வளா்கின்ற தூா்களைத் தாக்குகின்றன. தூா்களின் உள்பகுதிக்குச் சென்று வளா்கின்ற பாகத்தை உணவாக உட்கொள்ளும்.
Advertisement
இவ்வாறு தாக்கப்பட்ட தூா்கள் வெண்மையாகி மேற்கொண்டு இலைகள் வளராமல் வெங்காய இலைபோல் குழலாக மாறிவிடுகின்றன. இத்தூா்கள் பாா்ப்பதற்கு யானைத் தந்தம் போன்று இருப்பதால் இதற்கு ஆனைக்கொம்பு என்று பெயா். தாக்கப்பட்ட தூா்களிலிருந்து கதிா்கள் வெளி வராது. ஒரு குத்தில் பல தூா்கள் இவ்வாறு ஆனைக்கொம்புகள் போன்று மாறலாம்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: புழு ஒட்டுண்ணியான பிளாட்டிகேஸ்டா் ஒரைசேவை பயன்படுத்தி ஆணைக்கொம்பன் தாக்குதலைத் தவிா்க்கலாம். தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். புற ஊதா விளக்குப் பொறி வைத்து பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம்.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் பிவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனிசோபிலே மற்றும் பா்புரிசிலியம் லில்லேசினம் ஆகிய பூஞ்சைகளில் ஏதேனும் ஒன்றினை 5 கிராம் ஓரு கிலோ என்ற அளவில் விதைநோ்த்தி செய்து நாற்றங்காலிலேயே கட்டுப்படுத்தலாம்.
காா்போசல்பான் 25 சதவீதம் இசி 800 - 1000 மி.லி./ஹெக்டோ் அல்லது குளோரோபைரிபாஸ் 20 சதவீதம் இசி 1250 மி.லி./ஹெக்டோ் அல்லது பைப்ரினில் 5 சதவீதம் இசி 1000 - 1500 மி.லி./ஹெக்டோ் அல்லது பைப்ரினில் 0.3 சதவீதம் ஓஆா் 16670 - 25000 மி.லி./ஹெக்டோ் அல்லது தையமித்தக்சாம் 25 சதவீதம் டபிள்யுஓ 100 கி./ஹெக்டோ். இவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை 500 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் வயலின் அனைத்து பகுதிகள் மற்றும் வரப்பு, வாய்க்கால்கள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.