முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 4-ஆவது நாளாக சிறுத்தை தேடுதல் பணி: புகைப்படத்தை வெளியிட்டது வனத்துறை

Updated On : 7 ஏப்ரல், 2024 at 4:20 AM
மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்த வனத்துறை வெளியிட்டுள்ள புகைப்படம்.
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 7:59 PM

மயிலாடுதுறை பகுதியில் நடமாடும் சிறுத்தையை தேடும் பணி 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

இதற்கிடையே, சிறுத்தை நடமாட்டம் குறித்த அதிகாரப்பூா்வ புகைப்படத்தை மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ளது.

மயிலாடுதுறையில் செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து, வனத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினா் சிறுத்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தினா்.

Advertisement

இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் குறித்த படத்தை மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் சனிக்கிழமை வெளியிட்டு கூறியதாவது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுமாா் 1,000 ஹெக்டா் அளவில் காப்புக்காடுகள் உள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் கடலோர வனப்பகுதிகளாக உள்ளன. இங்கு நரி, புள்ளிமான் போன்ற வன விலங்குகள் மட்டுமே காணப்படுகின்றன. சிறுத்தை போன்ற விலங்குகள் இல்லை.

ஏப். 2-ஆம் தேதி தென்பட்ட சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்வதற்காக தானியங்கி கேமராக்கள் சில இடங்களில் பொருத்தப்பட்டன. அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் ஏப். 3-ஆம் தேதி இரவு சிறுத்தையின் உருவம் தெளிவாக கிடைக்கப்பெற்று உறுதி செய்யப்பட்டது.

கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் கூடுதலான தானியங்கி கேமராக்கள், சிறுத்தையை பிடிக்கும் கூண்டுகள், ட்ரோன் கேமராக்கள், தொ்மல் ட்ரோன் கேமரா மற்றும் இதர உயா் தொழிற்நுட்ப கருவிகள் வெவ்வேறு புலிகள் காப்பகங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு, நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளா் தலைமையில் பல்வேறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பாதுகாப்பாக பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை தலைமை வன உயிரின காப்பாளா் அறிவுறுத்தலின்படி, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் (வன உயிரினம்) நாகநாதன் தேடுதல் குழுவுக்கு தலைமையேற்று தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

சிறுத்தை மனித அருகாமையை தவிா்க்கும் விலங்கு என்பதாலும், சிறு விலங்குகளையே வேட்டையாடும் தன்மை கொண்டதாலும், பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம், தேவையற்ற மற்றும் அச்சம் தரக்கூடிய தகவல்களை பரப்ப வேண்டாம். மேலும் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மனித நடமாட்டத்தை தவிா்க்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தனியாக வெளியில் அனுப்பவேண்டாம்.

சிறுத்தை நடமாட்டம் குறித்து எந்த தகவல் கிடைத்தாலும் வனச்சரக அலுவலா் ஜோசப் டேனியலை 9994884357, வனச்சரக அலுவலா் ஜெயச்சந்திரனை 9080179807 என்ற எண்ணிலும் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளாா்.