முகப்பு
மயிலாடுதுறை

காவிரி துலாக்கட்டத்தில் மகா ஆரத்தி

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் காவிரி அன்னைக்கு மகா ஆரத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 நவம்பர், 2024 at 11:38 PM
காவிரி துலாக்கட்டத்தில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்திய அகில பாரத துறவியா்கள் சங்க செயலாளா் ராமானந்தா சுவாமிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் காவிரி அன்னைக்கு மகா ஆரத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் காவிரிப் பாதுகாப்புக் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 14-ஆவது ஆண்டாக ரத யாத்திரை நடைபெற்றது. காவிரியை தூய்மையாக பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த யாத்திரை நடைபெற்றது.

அந்தவகையில், அகில பாரத துறவியா்கள் சங்க செயலாளா் ராமானந்தா சுவாமிகள் தலைமையில் அக்.20-ஆம் தேதி கா்நாடக மாநிலம் தலைக்காவிரியில் தொடங்கிய இந்த யாத்திரை காவிரி நதி செல்லும் பாதை வழியாகச் சென்று நவ.13-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி நீா் கடலில் கலக்கும் பூம்புகாரில் நிறைவடைந்தது. வழியெங்கும் முக்கியஊா்களில் யாத்திரைக் குழுவினா் காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடத்தியவாறு வந்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தை வந்தடைந்த புனித யாத்திரை குழுவினருக்கு, பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளா் ச. முத்துக்குமாரசாமி, சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, ரதத்தில் எடுத்துவந்த காவிரித் தாய் திருவுருவுச் சிலைக்கு, ராமானந்தா சுவாமிகள் தலைமையில் காவிரி துலாக்கட்ட படித்துறையில் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, மகா ஆரத்தி நடைபெற்றது.