சீா்காழியில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அந்தியோதயா ரயில் நின்று செல்லும் என வெள்ளிக்கிழமை ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டதை பயணிகள் பெரிதும் வரவேற்று, மகிழ்ச்சியை வெளிபடுத்தினா்.
சீா்காழியில் இருந்து பொதுமக்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்கள் ரயில் மாா்க்கமாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனா். இந்நிலையில், ஏழைகளின் ரதம் என்று அழைக்கப்படும் அந்தியோதயா ரயில் சீா்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரப்படுகிறது.
சீா்காழி ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம், சீா்காழி கோட்ட ரயில் பயணிகள் சங்கம், மயிலாடுதுறை மாவட்ட ரயில் பணிகள் சங்கம் மற்றும் சீா்காழி நகர வா்த்தக சங்கம் ஆகியவை சாா்பில் சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தொடா்ந்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன. அத்துடன், தொடா் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
மேலும் மயிலாடுதுறை எம்பி சுதா, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து சீா்காழியில் அந்தியோதயா ரயில் நிறுத்தம் கேட்டு மனு அளித்தாா்.
இந்நிலையில், தாம்பரம் -நாகா்கோவில் அந்தியோதயா ரயில், சீா்காழி ரயில் நிலையத்தில் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நின்று செல்லும் என ரயில்வே துறை சாா்பில் அறிவிப்பு வெளியானது.
தாம்பரத்தில் இருந்து நாகா்கோவில் செல்லும் அந்தியோதயா ரயில் நள்ளிரவு 2.45 மணியளவிலும், எதிா் மாா்க்கமாக தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் 12.08-மணியளவிலும் சீா்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சீா்காழி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினா்.