நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டானில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு, இயற்கை முறையில் வாழைப் பழங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார் விவசாயி ஜெயபால்.
மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளில் ஒன்றான வாழை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் கனி வகையாகும். தமிழர் பண்பாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே கனி என்ற பெருமையை வாழைப்பழம் பெற்றுள்ளது. அனைத்து விதமான சுபகாரியங்களுக்கும் வாழைப்பழம் பயன்படுத்துவது இன்றியமையாததாக கருதப்படுகிறது. இந்த வாழையில் பழம், காய், பூ, தண்டு உள்ளிட்ட அனைத்தும் உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக வாழை விளங்குகிறது. பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய வாழை இனம், தமிழர்களின் வாழ்வில் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.
சமீப காலங்களில் உணவுப் பொருள்கள் விளைவிக்க அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை அதிகளவில் ஊடுருவதால் அதை உட்கொள்ளும் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. பழவகைகள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவைகளில் நச்சுத்தன்மை அதிகளவில் கலந்து இருப்பதால்தான் நோய்கள் அதிகரிப்பதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நீரிழிவு நோய், இருதய கோளாறு, சீறுநீரக நோய் போன்ற கொடிய நோய்கள் ரசாயனம் கலந்த உணவுகளை உட்கொள்ளுவதால் தாக்குவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றன. எனவே, மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் கோ. நம்மாழ்வார், நெல். ஜெயராமன் உள்ளிட்ட முன்னோடி விவசாய அறிஞர்களின் தொடர் பிரசாரங்களால் தமிழக விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி திரும்பி வருகின்றனர். மேலும் பொதுமக்களும் கூடுதல் விலையாக இருந்தாலும், அந்த பொருள்களையே விரும்பி வாங்கி வருகின்றனர்.
இயற்கை விவசாயத்தால் மண் வளம், இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது. உணவு உற்பத்திக்கு குறைந்த செலவு ஆவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி வாழை விவசாயம் செய்யும் கிடாரங்கொண்டான் ஜெயபால் என்பவர் தன்னுடைய தோட்டத்தில் இயற்கை முறையில் வாழைப் பழங்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து ஜெயபால் கூறியது: என்னுடைய 10 ஏக்கர் தோட்டத்தில் பூவன், ரஸ்தாளி, பேயன், மொந்தன், பிடிமொந்தன், உள்ளிட்ட வாழை வகைகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரசாயன உரங்களை பயன்படுத்தி வாழை விவசாயம் செய்தேன். இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட பின்பு என்னுடைய நிலத்தில் வாழைகன்றை ஊன்றுவதற்கு முன்பு மாட்டுசாணம், ஆட்டுசாணம் உள்ளிட்டவைகளை நிலத்தில் பரப்பி உழது விடுவேன். மேலும் ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு உள்ளிட்டவைகளை இடுப்பொருள்களாக இட்டு விவசாயம் செய்து வருகிறேன்.
ஒரு வாழைத்தாரில் 200 காய்கள் வரை உற்பத்தியாகின்றன. இதற்கு மேலாக விளைவிக்கபட்ட வாழைத் தார்களை குழிதோண்டி, அதில் வேப்பிலை, வாழை இலைகளை வைத்து குடாப்பு முறைப்படி பழங்களை பழுக்கவைக்கிறேன். என்னுடைய தோட்டம் மயிலாடுதுறை - பூம்புகார் பிரதான சாலையில் உள்ளது. எனவே, அங்கே சிறிய கடை அமைத்து பழங்களை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறேன்.
இயற்கை விவசாயத்தில் குறைந்த லாபம் கிடைக்கிறது. ரசாயன விவசாயத்தில் கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஆனால், இயற்கை விவசாயத்தில் சுமார் ரூ. 3 லட்சம் தான் லாபம் கிடைக்கிறது. இருந்தாலும் நல்ல தரமான பழங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வது மன திருப்பதி அளிக்கிறது. எனது தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழம் சுவையாக இருப்பதால் பொதுமக்கள் அதிகம் பேர் என்னிடம் வந்து வாங்கிச் செல்கின்றனர். அதிக தொலைவில் இருந்தும் கூட மக்கள் வந்து வாழைப்பழம் வாங்கிச் செல்வது திருப்பதி அளிக்கிறது. என்னை போல் இளைஞர்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.