சீர்காழி பகுதிகளில் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளவேண்டி இயற்கை விவசாய முன்னோடிகள் மறைந்த கோ. நம்மாழ்வார், நெல்.ஜெயராமன் ஆகியோர் இயற்கை முறையில் தங்களது விளைநிலங்களில் விவசாயம் செய்ய வேண்டும் என தொடர்ந்து பிரசாரங்கள் செய்து வந்தனர். மேலும், நெல். ஜெயராமன் வழக்கத்திலிருந்து முற்றிலும் அழிந்துபோன சீரக சம்பா, கிச்சலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருங்குருவி, கருப்புகவணி உள்ளிட்ட 170 வகையான பாரம்பரிய ரக நெல் வகைகளை மீட்டெடுத்து விவசாயத்துக்கு அர்ப்பணித்துள்ளனர்.
இந்த நெல்வகையில் ஒன்றான கருப்பு கவணி ரக அரிசியை உணவாக சாப்பிட்டால் மனிதர்களுக்கு ஏற்படும் கல்லீரல் சம்பந்தமான நோய் குணமடைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பூங்காறு ரக நெல் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகவும், குறிப்பாக கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஏற்படும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாப்பிள்ளை சம்பா ரக நெல் மூலம் இட்லி, தோசை, அவல் உள்ளிட்டவைகள் செய்ய பயன்படுகிறது. குறிப்பாக அனைத்து பராம்பரிய நெல்ரக வகைகள் மனிதரின் ஆரோக்கியத்துக்கு உதவியாக இருந்து வருகிறது. இதேபோல், இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் பயன்தரும் என பல்வேறு இயற்கை விவசாய சம்பந்தமான நூல்கள் விளக்குகின்றன.
தற்போது, தமிழகம் முழுவதும் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் ஆர்வம் விவசாயிகளிடையே அதிகரித்து வருகிறது. மக்களுக்கு ஏற்படும் இருதயநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு ரசாயன இடுபொருள்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் தான் வருகிறது என கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் மாரடைப்பால் 40 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் சுமார் 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. மனிதரின் நோய்களை முற்றிலும் தவிர்க்க இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதுதான் தீர்வு என மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இதன்காரணமாக அதிகளவில் விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இயற்கை விவசாயத்தை பிரபலமடைய செய்ய தொண்டு நிறுவனங்கள், சமுக ஆர்வலர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கண்காட்சிகள், கருத்தரங்குகள் நடத்தி வருகின்றனர். தமிழக அரசும் இயற்கை விவசாயத்துக்கு ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சீர்காழி வட்டத்துக்குள்பட்ட நெம்மேலி, கொள்ளிடம், அகணி, வள்ளுவகுடி, கீழசட்டநாதபுரம், புங்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
சீர்காழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பாரதி திருவெண்காட்டில் உள்ள தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது: எனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். நிகழாண்டு 145 நாள்களில் அறுவடைக்கு தயாராகும் கிச்சலி சம்பா, சீரக சம்பா ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்ய உள்ளேன். இதற்காக நாற்றங்காலை தயார் செய்து அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரத்தை பயன்படுத்தி உள்ளேன்.
பஞ்சகவ்ய கரசலை இருமுறை ஸ்பிரேயர் மூலம் தெளித்தேன். தற்போது 25 நாள்களே ஆன நிலையில் நாற்று செழிப்பாக வளர்ந்துள்ளது. அந்த நாற்றுகளை கொண்டு நடவு செய்துள்ளேன். நடவுக்கு முன்பு சேற்றில் அடியுரமாக நொச்சி இலை, ஆடாதொடை, எருக்கு, வேப்பிலை, உள்ளிட்ட பல்வேறு இலை தழைகளை தழைச்சத்து உரமாக வயலில் பரப்பி உழவு செய்த பின்னர் நாற்று நடவு செய்வேன்.
அறுவடைக்கு நெற்பயிர் தயாராகும் வரை வேப்பம்புண்ணாக்கு, கடல்பாசி, கடலைப் புண்ணாக்கு, அமிர்த கரைசல், பஞ்ச கவ்ய கரைசல் ஆகியவற்றை பயன்படுத்துவேன். வருங்காலங்களில் இளைஞர்கள், விவசாயிகள் முதற்கட்டமாக தங்கள் உணவு தேவைக்காவது தங்களது நிலங்களில் இயற்கை விவசாயத்தை செய்ய முன்வரவேண்டும் என்றார் அவர்.
பாரம்பரிய நெற்பயிரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியது:
பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய குறைந்த செலவாகிறது. நோய்த்தாக்குதல், மழை, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படுவதில்லை. உணவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியம் கூடுதலாக காணப்படுகிறது. வருங்காலங்களில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். எனவே இளைஞர்கள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட முன்வரவேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.