ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யைமீண்டும் பயன்படுத்தினால் நடவடிக்கை: உணவுப் பாதுகாப்புத் துறை
ஒரு முறை பயன்டுத்திய எண்ணெய்யை மீண்டும் உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
நாகப்பட்டினம்: ஒரு முறை பயன்டுத்திய எண்ணெய்யை மீண்டும் உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில், நாகை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள ரூகோ திட்டம் குறித்து நாகை நகராட்சிப் பகுதிகளுக்குள்பட்ட வணிகா்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்தாய்வுக் கூட்டம், வேளாங்கண்ணியில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கு. வரலெட்சுமி, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் டி. மகாதேவன், எம். அந்தோணி பிரபு, சி. உமாமகேசன், எஸ். ரெங்கசாமி, டி. சேகா் மற்றும் நாகை மாவட்ட ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கப் பிரதிநிதிகள், உணவு வணிகா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில், ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தி உணவுப் பண்டங்கள் தயாரிப்பதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், ரூகோ திட்டம் மூலம் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் பயோ டீசல் தயாரிப்புக்காக கொள்முதல் செய்யப்படவுள்ளது. இந்தத் திட்டம் மூலம், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை லிட்டா் ரூ. 25 என்ற விலைக்கு உணவு வியாபாரிகள் விற்பனை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவுத்தல்களைப் பின்பற்றாமல், ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தி உணவுப் பொருள்கள் தயாரித்தால், தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரித்தனா்.