திருக்குவளை: கீழ்வேளூா் அருகேயுள்ள வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாதிக்கப்பட்டவரின் உறவினா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
வடுகச்சேரியைச் சோ்ந்த அருள்தாஸ் மனைவி மகாலட்சுமி (21) பிரசவத்துக்காக அதே பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கு மருத்துவா் இல்லையென பணியில் இருந்தவா்கள் கூறியதாகவும், நாகை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தும், அந்த வாகனம் வர தாமதமானதால் தனியாா் வாகனத்தில் நாகை அரசு மருத்துவமனைக்கு சென்றாா். அப்போது, நாகை அருகே நரியங்குடி எனுமிடத்தில் மகாலட்சுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடா்ந்து, நாகை மருத்துவமனைக்கு குழந்தையுடன் மகாலட்சுமியும் அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனா். மகாலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மகாலட்சுமியின் உறவினா்கள் வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனா். தகவலறிந்த கீழையூா் போலீஸாா் அங்கு சென்று வட்டார மருத்துவ அலுவலா் ராமசாமி மற்றும் பணியாளா்கள் முற்றுகையில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.