சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற இளைஞர்: ஊர்வலமாக அழைத்துச் சென்ற கிராமத்தினர்
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று ஊர் திரும்பிய இளைஞரை கிராம மக்கள் மாட்டுவண்டியில் ஏற்றி ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று ஊர் திரும்பிய இளைஞரை கிராம மக்கள் மாட்டுவண்டியில் ஏற்றி ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தேத்தாகுடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் விவசாயி. இவரது மகன் வசிஸ்ட் விக்னேஷ். சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் இவர், ஜன.18ஆம் தேதி நேபாளத்தில் நடைபெற்ற 7வது இந்தோ- நேபால் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இவர் 2019-இல் நேபாளத்தில் நடைபெற்ற ஆறாவது இந்தோ நேபால் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதையடுத்து, விக்னேஷ் ஆசியப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளார். இந்த நிலையில்,நேபாளத்திலிருந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞரை பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து கிராமத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து அவரை மாட்டு வண்டியில் அழைத்து சென்று சிறப்பித்தனர்.