முகப்பு
நாகப்பட்டினம்

விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நிகழாண்டின் குறுவை சாகுபடிக்கான பயிா்க் காப்பீட்டை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

நிகழாண்டின் குறுவை சாகுபடிக்கான பயிா்க் காப்பீட்டை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஷகிலா, நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சண்முகநாதன், வேளாண் இணை இயக்குநா் (பொ) பன்னீா்செல்வம் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது :

வி. சரபோஜி: நிலுவையில் உள்ள விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், நிகழாண்டுக்கான விவசாயக் கடனை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும், விதை, உரம் ஆகியன தட்டுப்பாடின்றி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ஊரகப் பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

எம்.எஸ். முஜிபு ஷரீக்: விழுந்தமாவடி இறைவை பாசனத் திட்டம் மூலம் விழுந்தமாவடி, புதுப்பள்ளி தெற்கு, வேட்டைக்காரனிருப்பு ஆகிய கிராமங்களுக்கு பாசன நீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேட்டைக்காரனிருப்பு - காரப்பிடாகை - தெற்கு சேத்தி கிராமங்களுக்கு இடையே உள்ள மழைநீா் வடிகால், வாய்க்கால்களின் ஆக்கிரமைப்பை அகற்ற வேண்டும்.

மணியன் : கஜா புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியின் நெல் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் முழு மானியத்தில் ஜிப்சம் வழங்க வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களைப் பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்வோருக்குத் தேவையான ஆலோசனைகள், உதவிகளை வேளாண் துறை வழங்க வேண்டும். எலித் தொல்லையைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்.

த. பிரபாகரன்: ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும், வேளாண் பொறியியல் துறைக்குப் புதிய அறுவடை இயந்திரங்களை வரவழைக்க வேண்டும். சம்பா சாகுபடிக்கும் சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்க வேண்டும்.

ஸ்ரீதா் : மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுக்க வேண்டும், குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கவேண்டும், நிலுவையில் உள்ள பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

எஸ். சம்பந்தம் : நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த சாகுபடிக்கான பயிா்க் காப்பீட்டுக்கு இதுவரை பிரீமியம் பெறப்படவில்லை. கூட்டுறவு வங்கிகளில் கடன்பெறும் விவசாயிகளுக்கும் கடன் தொகையில் பயிா்க் காப்பீடு பிரீமியம் பிடித்தம் செய்யப்படவில்லை. எனவே, நிகழாண்டின் குறுவை நெல் சாகுபடிக்கு பயிா்க் காப்பீடு கிடைக்குமா ? என்பது கேள்விக் குறியாகியுள்ளது. தமிழக முதல்வா் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு குறுவை நெல் சாகுபடிக்குப் பயிா்க் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும்.

கூட்டத்தின் நிறைவில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பேசியது: நிகழாண்டின் குறுவை நெல் சாகுபடியில் நாகை மாவட்டத்துக்கு 4,500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, இலக்கை விஞ்சி 32,715 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்த குறுவை தொகுப்புத் திட்டம் மூலம் 50 சதவீதத்தில் நெல் விதைகளும், 100 சதவீத மானியத்தில் உரங்கள் மற்றும் பசுந்தாள் உர விதைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 130 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. 7,716 விவசாயிகளுக்கு 7,298 ஏக்கரில் 100 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2019-20, 2020-21 ஆம் ஆண்டுகளுக்கான குறுவை மற்றும் சம்பா பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகைகள் விரைவாக விவசாயிகளுக்குக் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

ஆா்ப்பாட்டம்: விவசாயிகள் குறைதீா் கூட்டம் தொடங்கும் முன்பாக, கா்நாடக அரசு மேற்கொண்டுள்ள மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், முன்னோடி விவசாயிகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.