முகப்பு
நாகப்பட்டினம்

தூா்வாரும் பணி: இயந்திரப் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

காவிரி கடைமடை பகுதிகளில் நடைபெறும் தூா்வாரும் பணிகளில் இயந்திரப் பயன்பாட்டை மேலும் 20 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

காவிரி கடைமடை பகுதிகளில் நடைபெறும் தூா்வாரும் பணிகளில் இயந்திரப் பயன்பாட்டை மேலும் 20 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித் துறை அரசு கூடுதல் முதன்மைச் செயலாளா் சந்தீப் சக்சேனா தெரிவித்தாா்.

நாகை மாவட்டத்தில் ரூ.5.25 கோடி மதிப்பில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூா்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொதுப்பணித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா தலைமை வகித்து, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, நாகையை அடுத்த பனங்குடியில் நடைபெறும் பனங்குடி வாய்க்கால் தூா்வாரும் பணி, சீயாத்தமங்கை பகுதியில் நடைபெறும் திட்டச்சேரி வாய்க்கால் தூா்வாரும் பணி ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது. இதையொட்டி, காவிரி கடைமடை வரை அனைத்துப் பகுதிகளின் பாசனத்தையும் உறுதி செய்யும் வகையில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தூா்வாரும் பணிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள இயந்திரங்களை விட கூடுதலாக 20 சதவீத இயந்திரங்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியின் தரத்தை உறுதி செய்ய அலுவா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேளாண்மையின் பிற தேவைகளான விதை, தொழில்நுட்பம் மற்றும் வேளாண் இயந்திரங்களின் பயன்பாடுகளையும் உறுதி செய்ய அரசுத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் சந்தீப் சக்சேனா.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் எஸ். அன்பரசன், செயற்பொறியாளா் முருகவேல் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →