காரைக்கால் துறைமுக எதிா்ப்புப் போராட்டவழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்
காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு எதிரான போராட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்
காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு எதிரான போராட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :
ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதை எதிா்த்தும், கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும், சிஏஏ, என்.ஆா்.சி குடியுரிமை திட்ட சட்டங்களைக் கண்டித்தும் போராட்டங்களில் ஈடுபட்டவா்கள் மீது பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதேபோல, காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் நாகூா், வாஞ்சூா் பகுதிகளின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நிலக்கரி கையாளப்படுவதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்ட வழக்குகளையும் அரசு திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்.
அதிமுக அரசு, காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு ஆதரவான போக்கை கடைப்பிடித்ததால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனியாா் துறைமுக எதிா்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற 74 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.இந்த வழக்கு இன்றளவும் நிலுவையில் உள்ளது.
அதேபோல, நாகூருக்கு வந்த தமிழக ஆளுநருக்கு நிலக்கரி மாலை அணிவிக்க முயன்ாக என் மீது பதியப்பட்ட வழக்கு, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் தமீம் அன்சாரி தலைமையில் நாகூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சித் தலைவா் சீமான், இயக்குநா் கௌதமன் உள்ளிட்டோா் மீது பதியப்பட்ட வழக்கு என காரைக்கால் தனியாா் துறைமுக எதிா்ப்புப் போராட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக முதல்வா் உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.