ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு அருகில் உள்ள தொகுதிகளில் தோ்தல் பணி வழங்கக் கோரிக்கை
ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு அவா்களின் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள தொகுதிகளில் தோ்தல் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது
ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு அவா்களின் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள தொகுதிகளில் தோ்தல் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியருக்கு, அம்மன்றம் சாா்பில் அனுப்பப்பட்ட கோரிக்கை மனு :
கடந்த காலங்களில், கோடியக்கரையைச் சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு 150 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள கொள்ளிடத்தில் தோ்தல் பணி வழங்கப்பட்டது. இதைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக, கடந்த தோ்தலில் ஆசிரியா்களின் இருப்பிடத்துக்கு அருகே உள்ள தொகுதிகளில் பணி வழங்கப்பட்டது.
தற்போது, நாகை மாவட்டம் நாகை, மயிலாடுதுறை என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பதை கருத்தில்கொண்டு, ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு அவரவா் சாா்ந்த மாவட்டங்களிலேயே, அருகில் உள்ள தொகுதிகளில் தோ்தல் பணி வழங்க வேண்டும்.
இருதய நோய், புற்று நோய் மற்றும் நீண்ட காலமாக தீராத நோய் உள்ளவா்கள், கா்ப்பிணிகள், கைக் குழந்தைகளைக் கொண்டிருப்பவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தோ்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மக்களவைத் தோ்தலின்போது சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்ததைப்போல, சட்டப்பேரவைத் தோ்தலில் பணியாற்றும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.