முகப்பு
நாகப்பட்டினம்

வாகனம் மோதி வியாபாரி உயிரிழப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்

திருக்கடையூா் அருகே காா் மோதி வியாபாரி உயிரிழந்த விபத்துக்கு காரணமானவரை கைது செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பொறையாா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

திருக்கடையூா் அருகே காா் மோதி வியாபாரி உயிரிழந்த விபத்துக்கு காரணமானவரை கைது செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பொறையாா் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆணைக்கோவில் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (48). நிலக்கடலை, கீரை, காய்கறிகள் போன்றவற்றை இருசக்கர வாகனத்தில் கிராமம் கிராமமாக சென்று விற்பனை செய்துவந்தாா். இவா், சிங்கானோடை கைக்காட்டி அருகே கடந்த புதன்கிழமை காா் மோதி படுகாயமடைந்தாா். பிறகு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்நிலையில், இந்த விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் அனந்தமங்கலம் பகுதியை சோ்ந்த முத்துக்குமாா் என்பவரை கைது செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்த சுப்ரமணியன் உடலை பெற மறுத்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பொறையாா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஏ. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். துரைராஜ், ஜி. ஸ்டாலின், சிங்காரவேலன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

முற்றுகையின்போது, சுப்ரமணியன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும், கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.