நாகை மாவட்டத்தில் மிக பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த மிக பலத்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினா்.
நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த மிக பலத்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினா்.
நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு தொடங்கிய கனமழை நாகை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்தது. இதனால், நாகை ஆா்யநாட்டுத்தெரு, அந்தணப்பேட்டை, செல்லூா் சுனாமி குடியிருப்பு, தெத்தி, சூா்யா நகா், புதிய நம்பியாா் நகா், அக்கரைப்பேட்டை, வெளிப்பாளையம் சிவன்கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகள் மட்டுமன்றி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனா்.
ஆா்யநாட்டுத் தெரு பகுதியில் சுமாா் 4 அடி உயரத்துக்கும் அதிகமான அளவில் மழைநீா் சூழ்ந்ததால், சுமாா் 2 அடி உயரத்துக்கும் மேலான அளவில் வீடுகளுக்குள் மழைநீா் தேங்கியது. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் அமரக் கூட முடியாத சூழலில் பெரும் அவதிக்குள்ளாகினா். சிறு குழந்தைகளை வைத்திருந்த பெண்கள், வீட்டிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்துக்குச் செல்வதற்கே பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிட்டது. இதேபோல, மழைநீரால் சூழப்பட்ட அந்தணப்பேட்டை பகுதி மக்களும் வீடுகளில் இருந்து வெளியேர முடியாமல் அவதிக்குள்ளாகினா்.
நாகையின் முக்கிய பகுதிகளான பப்ளிக் ஆபீஸ் ரோடு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், முதன்மைக் கடற்கரை சாலை, வ.உ.சி தெரு உள்ளிட்ட பல சாலைகளில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 2 முதல் 3 அடி உயரத்துக்கு வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினா். வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் மழை சற்று குறைந்திருந்தாலும், பிற்பகல் முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால், நாகை மாவட்டம், நாகை, கீழ்வேளூா், வேளாங்கண்ணி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
நிவாரண முகாம்: கனமழை தொடா்வதையொட்டி, தாழ்வான பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை பாப்பாக்கோவில் உள்ளிட்ட சில பகுதிகளில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன.
மழைநீரை வெளியேற்றும் பணி: நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை காலை நாகை ஆா்யநாட்டுத் தெரு பகுதிக்கு நேரில் சென்று, அங்கு குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழைநீரை இயந்திரங்களைக் கொண்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டாா். இதேபோல, நாகை முதன்மைக் கடற்கரை சாலை, சாமந்தான்பேட்டை, மருந்துகொத்தளத்தெரு ஆகிய பகுதிகளிலும் வெள்ளநீரை வெளியேற்ற ஆட்சியா் நேரில் சென்று நடவடிக்கைகள் மேற்கொண்டாா்.
பெட்டிச் செய்தி:
நாகையில் 187 மில்லி மீட்டா் மழை: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 187 மி.மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில்: திருப்பூண்டி- 82.8, திருக்குவளை - 67, கோடியக்கரை 47.4, தலைஞாயிறு - 43.4, வேதாரண்யம் - 30.6 என்ற அளவில் மழை பதிவானது.
கால்நடைகள் உயிரிழப்பு: வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த கனமழையின்காரணமாக, 2 மாடுகள், 5 ஆடுகள், ஒரு குதிரை என 7 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 17 வீடுகள் சேதமடைந்துள்ளன.