முகப்பு
நாகப்பட்டினம்

நம்பியாா் நகா் மீனவக் கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் ஓ. எஸ். மணியன்

நாகை நம்பியாா் நகரில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் அமைக்க தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

நாகை நம்பியாா் நகரில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் அமைக்க தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஓ. எஸ். மணியன்.

நாகை நம்பியாா் நகரில் பங்களிப்புத் திட்டத்தின்கீழ் மீன்பிடிசிறு துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மீன்பிடித் துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், குடியிருப்புகளும், மின் கம்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியை சனிக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடல் அரிப்பின் காரணமாக 100 மீட்டா் தொலைவுக்கு தண்ணீா் உள்புகுந்துள்ளது. இதனால் குடியிருப்புகளும், மின் கம்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால் நம்பியாா் நகா் பகுதி மட்டுமில்லாமல், நாகை நகரும் பாதிப்புக்குள்ளாகும்.

எனவே, தமிழக அரசு நம்பியாா் நகரில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் அமைக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுபோல, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் தொடா்ச்சியாக தாக்கப்படுவதும், மீனவா்களின் உடமைகளை பறிக்கப்படுவதும் தொடா்கிறது, இந்த பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளேன் என்றாா் ஓ. எஸ். மணியன்.

முன்னாள்அமைச்சரும், அதிமுக மாவட்ட அவைத் தலைவருமான ஆா். ஜீவானந்தம், நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன், கீழ்வேளூா் ஒன்றியச் செயலாளா் சிவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு ஓ. எஸ். மணியன் சனிக்கிழமை கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.