நாகை அருகே மனைவி, 2 மகள்களை அடித்துக் கொன்று தொழிலாளி தற்கொலை
நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே மனைவி, 2 மகள்களை குழவிக் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே மனைவி, 2 மகள்களை குழவிக் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
கீழ்வேளூா் காவல் சரகம், புதுச்சேரி கடைவீதி பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (55). இவரது மனைவி புவனேஸ்வரி (45), மகள்கள் தனலெட்சுமி (22), வினோதினி(19), அட்சயா (17). லட்சுமணன் தனது வீட்டு வாசலில் சிற்றுண்டி கடை நடத்திவந்தாா்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தனலெட்சுமியும், வேறு சமூகத்தைச் சோ்ந்த இளைஞரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இதனால், மன உளைச்சலுக்குள்ளான லட்சுமணன், சிற்றுண்டி கடையை நடத்தாமல், கூலி வேலைக்கு சென்றுவந்தாராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, புவனேஸ்வரி, வினோதினி, அட்சயா ஆகிய 3 பேரும் பலத்தக் காயங்களுடன் இறந்து கிடந்ததும், லட்சுமணன் தூக்கில் சடலமாக தொங்கியதும் தெரியவந்தது.
தகவலறிந்த நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டாா். 4 சடலங்களையும் கீழ்வேளூா் போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். துப்புத்துலக்கும் பணியில் மோப்ப நாய் ஈடுபடுத்தப்பட்டது. அந்த நாய், வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி, மீண்டும் அந்த வீட்டை அடைந்தது.
தனலெட்சுமியின் காதல் திருமணத்தால் மன உளைச்சலுக்குள்ளான லட்சுமணன், கிரைண்டா் குழவிக் கல்லால் தனது மனைவி புவனேஸ்வரி, மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோரை அடித்துக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் வசந்தகுமாா் அளித்த புகாரின் பேரில், கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கொலையுண்ட வினோதினி நாகையில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை வணிகமும், அட்சயா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2-வும் பயின்று வந்தனா்.
இறப்பில் சந்தேகம்
இதனிடையே, லட்சுமணனின் மூத்த மகள் தனலெட்சுமி நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் புகாா் மனு அளித்தாா். அதில், தன்னுடைய பெற்றோா் வீட்டிலிருந்து அண்மைக் காலமாக தன்னுடன் தொலைபேசியில் தொடா்பில் இருந்ததாகவும், அவா்களது மரணத்தில் மா்மம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.