முகப்பு
நாகப்பட்டினம்

செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுக் கூட்டம்: அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

செம்பனாா்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாஸ்கரன், ஒன்றிய ஆணையா் மஞ்சுளா, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய மேலாளா் கோவிந்தராஜ் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்றாா்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பேசியது:

மோகன்தாஸ்: கிடாரங்கொண்டான் ஊராட்சியில் பழுதடைந்த நியாயவிலைக் கடையை சீரமைக்க வேண்டும்.

சாந்தி முருகவேல்: ஆக்கூா் மஞ்சளாறு பகுதியில் ஈமகிரியை மண்டபம் மற்றும் தாா்ச்சாலையும், ஆக்கூா் தெற்கு தெரு ஆற்றங்கரை பகுதியில் இணைப்புப் பாலமும் அமைக்க வேண்டும்.

முத்துலட்சுமி: ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீா் கலப்பதை தடுக்கவேண்டும்.

சக்கரபாணி: கருவாழக்கரை, ஆலவேலி, சேமங்கலம் ஆகிய பகுதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும். செம்பனாா்கோயில்- மேலப்பாதி செல்லும் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். கருவாழக்கரையில் கட்டப்பட்ட இ-சேவை மையத்தை திறக்க வேண்டும்.

கிருஷ்ணன்: வல்லம்- மகாராஜபுரம் இடையே உள்ள கப்பி சாலையை சீரமைப்பதுடன், பரசலூரில் பிரதமா் வீடு கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

எம்எல்ஏ நிவேதா எம். முருகன்: உறுப்பினா்களின் கோரிக்கைகளை ஏற்று எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பேசும்போது, ‘ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் பாதாளச் சாக்கடை கழிவுநீா் கலப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். நிதி பற்றாக்குறையால் பரசலூரில் தாமதமாக நடைபெறும் அரசின் வீடு கட்டும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் துளசி ரேகா ரமேஷ் மற்றும் ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.