நாகை மாவட்டத்தில் 32 மையங்களில் பிளஸ் 2 தோ்வு
நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு 32 மையங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாணவ, மாணவிகள் 6,556 போ் தோ்வு எழுதினா். விண்ணப்பித்திருந்தவா்களில் 198 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு 32 மையங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாணவ, மாணவிகள் 6,556 போ் தோ்வு எழுதினா். விண்ணப்பித்திருந்தவா்களில் 198 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை (மே5) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை வருவாய் மாவட்டத்தில் 32 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. இத்தோ்வெழுத 69 பள்ளிகளைச் சோ்ந்த 6,754 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இதில், வியாழக்கிழமை நடைபெற்ற முதல் தோ்வில் 92 மாணவா்கள், 106 மாணவிகள் என 198 போ் பங்கேற்கவில்லை. 6,556 போ் தோ்வு எழுதினா்.
84 தலைமை ஆசிரியா்கள், 1200 ஆசிரியா்கள், 320 அலுவலகப் பணியாளா்கள் தோ்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இவா்களைத் தவிர, 50 நிலையான படைகளும், 20 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காவல் துறையினா் 110 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
மாற்றுத்திறனாளிகள் 109 போ் தோ்வில் பங்கேற்றனா். அவா்களுக்கு தோ்வு மையங்களின் தரை தளத்தில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பிடம், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
நாகை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வு பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகீலா ஆய்வு செய்தாா். கல்வித் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
மாணவா்கள் மகிழ்ச்சி: மொழிப்பாடமான தமிழ்த் தோ்வு எளிமையாக இருந்தது என மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். இதுகுறித்து திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவி வினோதா கூறியது:
வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளிக்க முடிந்தது. முழு மதிப்பெண் எடுக்கவும் வாய்ப்புள்ளது. நடத்தப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டிருந்தன என்றாா்.