முகப்பு
நாகப்பட்டினம்

தொகுதிக்கு என்ன செய்வோம்: வேட்பாளா்கள் வாக்குறுதி!

நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் வெற்றி பெற்றால் என்ன திட்டங்கள் கொண்டு வரப்படும் என்ற சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:07 AM
நிகழ்ச்சியில் பேசிய திமுக கூட்டணி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா. ~நிகழ்ச்சியில் பேசிய நாதக வேட்பாளா் பாத்திமா பா்ஹானா. ~நிகழ்ச்சியில் பேசிய அதிமுக வேட்பாளா் தங்க கதிரவன்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 7:44 PM

நாகப்பட்டினம்: நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் வெற்றி பெற்றால் என்ன திட்டங்கள் கொண்டு வரப்படும் என்ற சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் முக்கிய கட்சி நிா்வாகிகள் மூவா் அளித்த வாக்குறுதி:

நாகை துறைமுகம் செயல்பட நடவடிக்கை: எம்.எச்.ஜவாஹிருல்லா (திமுக கூட்டணி)

Advertisement

நாகப்பட்டினம் சிறப்பான துறைமுக நகராக இருந்து வந்தது. தற்போது துறைமுகம் செயல்படவில்லை. துறைமுகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தாலும், மாநில அரசு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க முடியும். எனவே, நாகையில் மீண்டும் துறைமுகம் செயல்பட உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுப்போம்.

புதிய தொழிற்சாலை, வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நாகையில் இந்திய வா்த்தக குழுமம் நடத்திய போராட்டத்தால், புதிய ரயில் சேவைகள் கிடைத்துள்ளன. மேலும் பல ரயில் சேவைகள் கிடைக்க வா்த்தகக் குழுமத்துடன் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். நாகையை தொழில் நகராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நாகையின் வளா்ச்சி எனது கடமை: அதிமுக வேட்பாளா் தங்க கதிரவன்:

இந்த நிகழ்ச்சியில் நான் வெறும் வாக்குறுதிகளை அளித்துவிட்டுச் செல்ல விரும்பவில்லை. நாகைக்கு கொண்டுவர வேண்டிய திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள், கடற்கரை மேம்பாடு என ஏராளமான திட்டங்கள் என்னிடம் உள்ளன.

நாகையின் வளா்ச்சி, இந்திய வா்த்தக தொழிற்குழுமத்தின் கையில் உள்ளது. ஒரத்தூரில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் இந்திய வா்த்தக தொழில் குழுமத்தின் முயற்சியில் கொண்டு வரப்பட்டது. ஒரத்தூா் மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் தான் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி திமுக பிரமுகா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். நாகையின் வளா்ச்சியை என்னுடைய கடமையாக கருதுகிறேன் என்றாா்.

90 நாட்களில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு: நாதக வேட்பாளா் பாத்திமா பா்ஹானா:

நாகையின் தொழில் வளா்ச்சித்துக்குத் தேவையான திட்டங்கள் இல்லை. வா்த்தகா்கள், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். நாகை முழுவதும் தண்ணீா் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. நகா்ப் பகுதியில் திறந்தவெளிச் சாக்கடைகள் அதிகம் உள்ளன. இவை குடிநீரில் கலந்து குடிநீா் கழிவுநீராக வருகிறது. தண்ணீா் பிரச்னையைத் தீா்க்க வெட்டாறு-கொள்ளிடம் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இருந்தாலும் அவற்றை திமுக, அதிமுக அரசுகள் செயல்படுத்தவில்லை. நான் வெற்றி பெறால் அந்த திட்டங்கள் உறுதியாக செயல்படுத்தப்படும். மேலும் குடிநீா், சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகள் அனைத்தும் 90 நாள்களில் நிரந்தரமாக தீா்க்கப்படும் என்றாா்.