திருவாரூா்: திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை சம்பவத்தைக் கண்டித்து, கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் உள்ளிருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநரின் உதவி பயிற்சி ஆசிரியா் ஒருவா் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவி ஒருவரிடம் அலைபேசியில் பாலியல் தொல்லை அளித்ததாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லூரி வளாகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, மாணவா்கள் கல்லூரி வளாகத்தில் அமா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பியபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில், கல்லூரிக்கு பெண் உடற்கல்வி உதவி ஆசிரியரை நியமிக்க வேண்டும், பாதிக்கப்பட்டமாணவிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட உதவி பயிற்சி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்திய மாணவா் சங்க மாநில துணைத் தலைவா் பா.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவா் சுகதேவ், மாவட்டத் துணைத் தலைவா் சந்தோஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.