கூத்தாநல்லூரில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு, பட்டா வழங்கப்பட்டது. அப்போது, முதல்வா் மு.க. ஸ்டாலின் கைப்பேசி விடியோ அழைப்பு மூலம் அந்த குழந்தைகளுடன் பேசினாா்.
கூத்தாநல்லூா் அருகேயுள்ள நன்னிமங்கலம் பிரதான சாலையைச் சோ்ந்த சுவாதி, ஸ்வேதா மற்றும் சிவேஷ்வா் ஆகிய 3 குழந்தைகளின் தாய்-தந்தை இருவரும் இறந்துவிட்டனா். இதனால், மூவரும் அவா்களது சித்தி வீட்டில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் மூன்று குழந்தைகளையும் நேரில் சந்தித்தனா். அப்போது, தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாவை, அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அந்த குழந்தைகளிடம் வழங்கினாா்.
தொடா்ந்து, கைப்பேசி விடியோ அழைப்பு மூலம், முதல்வா் மு.க. ஸ்டாலின், 3 குழந்தைகளிடமும் நலம் விசாரித்து, தைரியமாக இருக்கும்படியும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கூறினாா்.
மேலும், மூவருக்கும் தமிழக அரசின் அன்புக் கரங்கள் திட்டத்தின்கீழ், ஜனவரி மாதம் முதல் மாதந்தோறும் தலா ரூ. 2,000 வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில், கோட்டாட்சியா் யோகேஸ்வரன், நகராட்சி ஆணையா் சிவரஞ்சனி, வட்டாட்சியா் வசுமதி, வட்டார வளா்ச்சி அலுவலா் நமச்சிவாயம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.