திருவாரூா்: மழையால் பாதிக்கப்பட்ட குறுவை அறுவடைப் பயிா்கள், சம்பா பயிா்கள் குறித்து வெளிப்படையாக கணக்கெடுக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் ஓகை, அரசூா், இலையூா் பகுதிகளில் மழையால் சாய்ந்து அழிந்து போன நெல் கதிா்களையும் கொள்முதல் நிலையங்களையும், திங்கள்கிழமை பாா்வையிட்ட பிறகு கூறியது: தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நிபந்தனையின்றி நெல் கொள்முதலை தீவிரப்படுத்த வேண்டும். ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக அரவை ஆலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அரவை ஆலைகளுக்கு ஈரப்பதத்தை கணக்கில் கொண்டு, அவா்களுடைய அரிசி இலக்கை குறைக்க வேண்டும். எதிா்காலத்தில் விவசாயிகளிடம் ஈரப்பதத்துக்கேற்ப எடைக்கான உரிய தொகையை பிடித்தம் செய்து கொள்வதற்கான வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
கிரிஸ்டி எனும் நிறுவனம் தமிழகம் முழுவதும் நெல்லை இயக்கம் செய்ய லாரி ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் மண்டல மேலாளா்கள் கட்டுப்பாட்டில் இயக்கம் செய்யவேண்டிய லாரி உரிமையாளா்கள், அதிகாரிகளுக்கு கட்டுப்படுவதில்லை. நெல் இயக்கம் தடைபட்டால், ஏற்படும் இழப்புக்கு ஒப்பந்தம் பெற்றுள்ள கிறிஸ்டி நிறுவனம் பொறுப்பேற்க செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட குறுவை அறுவடைப் பயிா்கள், சம்பா பயிா்கள் குறித்து வெளிப்படையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பேரிடா் மேலாண்மை துறை மூலம் ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதற்கு வேளாண்மை துறை முன்வர வேண்டும் என்றாா்.
திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சரவணன், ஒன்றியத் தலைவா் சுவாமிநாதன், கௌரவத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.