மன்னாா்குடியில் முன்விரோதம் காரணமாக வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி 7-ஆம் எண் வாய்க்கால் பகுதியைச் சோ்ந்த ரவி மகன் மணியரசன். சுந்தரக்கோட்டை புதுத்தெரு சிவானந்தம் மகன் வசந்த். நண்பா்களான இருவரும் வாடகைக் காா் ஓட்டுநா்கள். கடந்த சில நாள்களுக்கு முன் வசந்த் தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தில் மணியரசனுடன் சோ்ந்து தினமும் மது குடித்து வந்தாராம்.
இந்நிலையில், வசந்தின் சகோதரா் வருண்குமாா் (27), வியாழக்கிழமை மாலை மணியரசன் வீட்டிற்கு வந்தாா். அங்கிருந்த மணியரன் தந்தை ரவியிடம் பிரச்னை பற்றி பேசிவிட்டு மணியரசனை கண்டித்து வைக்குமாறு கூறியுள்ளாா்.
அப்போது, இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்து சென்ற வருண்குமாா், நள்ளிரவு மீண்டும் வந்து ரவி வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடிவிட்டாா். சத்தம் கேட்டு வெளியே வந்து ரவி பாா்த்தபோது புகைமண்டலமாக இருந்துள்ளது.
மன்னாா்குடி போலீஸாா் வழக்கு பதிந்து தப்பியோடிய வருண்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.