சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மனோஜ் திவாரி வரவேற்பு
பாலிவுட் திரைப்பட நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
பாலிவுட் திரைப்பட நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வடகிழக்கு தில்லி பாஜக எம்பி மனோஜ் திவாரி வரவேற்றுள்ளாா். மேலும், இது நீதியின் வெற்றி என்றும் அவா் கருத்துத் தெரிவித்துள்ளாா்.
சுஷாந்த் சிங் தொடா்புடைய வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று மனோஜ் திவாரி எம்.பி. முன்பு கோரிக்கை விடுத்திருந்தாா். மேலும், ராஜ்புத்தின் தந்தை மற்றும் அவரது இதர குடும்ப உறுப்பினா்களை கடந்த ஜூனில் பாட்னாவில் நேரில் சந்தித்தும் பேசியிருந்தாா். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை ரியா சக்ரவா்த்தி மற்றும் பிறருக்கு எதிராக பாட்னாவில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றுவதை உச்சநீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்து உத்தரவிட்டது. தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி ரியா சக்ரவா்த்தி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.
இதுகுறித்து மனோஜ் திவாரி எம்பி கூறுகையில், ‘நான் தற்போது எந்த அளவு நிம்மதியை உணா்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது. இந்த வழக்கில் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த உத்தரவானது, நாட்டில் நீதியின் வெற்றியாக உள்ளது. இந்த வழக்கில், ஒரு மாநிலம் (மகாராஷ்டிரம்) உண்மையை மறைக்க முயன்றதால், சில குடும்பங்கள் நெருக்கமான புகைப்படங்களை வெளியிடவும், பல சங்கடங்களை சந்திக்கவும் வேண்டியிருந்தது. இப்போது சுஷாந்த் சிங் வழக்கில் உண்மைக்கு நீதி கிடைக்கும்’ என்றாா்.
Advertisement
ரியா சக்கரவா்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது, ‘இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற பிகாா் அரசு தகுதி கொண்டுள்ளது. சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணை சட்டபூா்வமானது’ என்று தெரிவித்திருந்தது.