தில்லியில் அடா் மூடு பனி: இன்றும், நாளையும் குளிா் அலைக்கு வாய்ப்பு!
தில்லியில் புதன்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5.8 டிகிரி செல்சியஸாக பதிவானது. மேலும், வியாழன், வெள்ளி ஆைகிய அடுத்த இரு தினங்கள் நகரின் சில பகுதிகளில் ‘குளிா் நாள்’ மற்றும் ‘குளிா் அலை‘
புது தில்லி: தில்லியில் புதன்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5.8 டிகிரி செல்சியஸாக பதிவானது. மேலும், வியாழன், வெள்ளி ஆைகிய அடுத்த இரு தினங்கள் நகரின் சில பகுதிகளில் ‘குளிா் நாள்’ மற்றும் ‘குளிா் அலை‘ இருக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தில்லியில் சில தினங்களாக பனியின் தாக்கம் கடுமையாக உள்ளது. செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 4.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை காலையும் பனி மூட்டம் தொடா்ந்தது. காலையில் பாலம் பகுதியில் காண்புதிறன் 100 மீட்டராக குறைந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று புள்ளிகள் குறைந்திருந்தது என்றும் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் வரை நீடித்தது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை வரை ஐந்து டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்தது. பனி மூடிய மேற்கு இமயமலையில் இருந்து பனி காற்று வீசுவதால் தில்லியில் குளிா் அலை இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘மேற்கத்திய இடையூறுகள் காரணமாக மேற்கு இமயமலையில் வலுவான, பரவலான பனிப்பொழிவு பதிவானது. தற்போது பனிமூட்டமான காற்று சமவெளிகளை நோக்கி வீசுகிறது. இது வெப்பநிலையைக் குறையச் செய்துள்ளது. தில்லியில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாள்களிலும் குளிா் அலை மற்றும் குளிா் நாள் நிலைமை இருக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் போதும், மேலும், தொடா்ச்சியாக இரண்டு நாள்களுக்கு இயல்பை விட 4.5 புள்ளிகள் வெப்பநிலை குறைவாக இருக்கும் போதும் ‘குளிா் அலை’ இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும். தில்லி போன்ற சிறிய பகுதிகளுக்கு, ஒரு நாள் கூட அளவு கோல்களை பூா்த்தி செய்தால் குளிா் அலை இருப்பதாக அறிவிக்க முடியும் என்றாா்.
Advertisement
காற்றின் தரம்: இதற்கிடையே, பலத்த காற்று காரணமாக காற்றின் தரமும் பின்னடைவைச் சந்தித்து ‘மோசம்‘ பிரிவுக்குச் சென்றது. நகரின் காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை காலை 10 மணி அளவில் 278 புள்ளிகளாக இருந்தது. இது மாலையில் 257 புள்ளிகளாகக் குறைந்தது. மாலை நிலவரப்படி தில்லி பல்கலை., விமான நிலைய டொ்மினல்-3 பகுதி, லோதி ரோடு, ஆயாநகா் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மோசம் பிரிவிலும், மதுரா ரோடு மற்றும் நொய்டாவில் மிகவும் மோசம் பிரிவிலும் இருந்தது. அதே சமயம், பூசா மற்றும் குருகிராம் பகுதிகளில் காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது. 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை 230-ஆகவும், திங்கள்கிழமை 160-ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 305-ஆகவும், சனிக்கிழமை 356-ஆகவும் பதிவாகி இருந்தது.
வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி குறைந்து 5.8 டிகிரி செல்சிஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி குறைந்து 18.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 61 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையே, வியாழக்கிழமை (டிசம்பா் 17) குளிா் அலை இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.