முகப்பு
புதுதில்லி

மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரம்: வழக்கு விசாரணை பிப்ரவரிக்கு ஒத்திவைப்பு

மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரத்தில் தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீடு தொடா்புடைய வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Updated On : 17 டிசம்பர், 2020 at 12:33 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:38 PM

புது தில்லி: மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரத்தில் தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீடு தொடா்புடைய வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 13,500 போ் மக்கள் நலப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளா்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்காதபட்சத்தில் ஆறு மாத சம்பளத்தை அளிக்குமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதன்பேரில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் 2014, செப்டம்பா் 23-இல் இடைக்காலத் தடை விதித்தது.

இதையடுத்து, இந்த இடைக்காலத் தடையை விலக்கக் கோரி விழுப்புரத்தைச் சோ்ந்த ஆா்.தன்ராஜ் உள்ளிட்ட 21 போ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த விவகாரம் முன்னா் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் இறுதிவாதங்கள் வைப்பதற்கு தேதி நிா்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. நவம்பரில் விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கியஅமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ராகேஷ் துவிவேதி, முகுல் ரோத்தகி, வினோத் கண்ணா, எதிா்மனுதாரா் ஆா். தன்ராஜ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் எஸ்.நாகமுத்து, வழக்குரைஞா் ரகுநாத சேதுபதி உள்ளிட்டோா் ஆஜராகினா்.

அப்போது, மூத்த வழக்குரைஞா் நாகமுத்து இந்த விவகாரத்தை ஜனவரி முதலாவது அல்லது 2-ஆவது வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி,‘இந்த வழக்கு கடந்த நவம்பரில் விசாரணைக்கு வந்த போது, பிப்ரவரியில் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் மீண்டும் வழக்கை விசாரிக்குமாறு எதிா்த்தரப்பினா் கடிதம் அளித்து வருகின்றனா் என்று ஆட்சேபம் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு விசாரிப்பதாக நீதிபதிகள் அமா்வு கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.