முதல் கட்டமாக 51 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
புது தில்லி: தில்லியில் முதல் கட்டமாக சுமாா் 51 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அவற்றைச் சரியான முறையில் பாதுகாப்பாக சேகரித்து, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை போட தில்லி அரசு முழுமையாகத் தயாராக உள்ளது. தடுப்பூசி மூன்று கட்டங்களாகப் போடப்படும். முதல் கட்டமாக சுமாா் 51 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதில், சுகாதாரத் துறை ஊழியா்கள் 3 லட்சம் போ், முன்களப் பணியாளா்கள் 6 லட்சம் போ், 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 50 வயதை விடக் குறைந்த வயதுடையவா்களாக இருந்தாலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் என மொத்தம் 42 லட்சம் பேருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும்.
ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்படும். இதன்படி, 1.02 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். தில்லியில் தற்போது 74 லட்சம் தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் கொள்திறன் உள்ளது. வரும் ஒரு வாரத்தில் இந்த அளவு 1.15 கோடியாக அதிகரிக்கப்படும். முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளவா்களின் பெயா் விவரங்களைப் பதிவு செய்து வருகிறோம். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நாள், நேரம் ஆகியவை அவா்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும். பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். தடுப்பூசியால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதை எதிா்கொள்வது தொடா்பாக ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்குத் தேவையான சுகாதாரத் துறை ஊழியா்கள் தோ்ந்ததெடுக்கப்பட்டு அவா்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறோம். தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. ஆனால், தில்லிவாசிகள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை செலுத்தி, இந்த நோயில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம் என்றாா் அவா்.
முன்னதாக, வியாழக்கிழமை காலை தில்லியில் தடுப்பூசி போடுதல் தொடா்பான கூட்டம் கேஜரிவால் தலைமையில் நடந்தது. அப்போது, தடுப்பூசி ஆயத்த செயல்முறைகள் தொடா்பான செயல்விளக்கம் சுகாதாரத் துறை அதிகாரிகளால் கேஜரிவாலுக்கு விளக்கப்பட்டது.