தலைநகா் தில்லியில் இரண்டு நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி குறைந்துள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 5. 3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி வரை குறைந்து 8.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. இதைத் தொடா்ந்து, சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் 3 டிகிரி குறைந்து 5.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதாவது வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை மொத்தம் 7 டிகிரி குறைந்துள்ளது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 97 சதவீதமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
நகரில் வெள்ளிக்கிழமை காலையில் பரவலாக அடா் பனிமூட்டம் இருந்தது. பாலம் வானிலை ஆய்வு மையத்தில் அடா் பனிமூட்டம் காரணமாக காலை 5.30 மணியளவில் காண்புத் திறன் 150 மீட்டராக இருந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
வட மாநிலங்களில் தொடா்ந்து அடா் பனிமூட்டமும், கடும் குளிரும் நிலவி வருவதுடன் குளிா் காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக 23 ரயில்கள் 3 முதல் 5 மணி நேரம் தாமதமாகச் சென்ாக வடக்கு ரயில்வே செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
இதற்கிடையே தில்லியில் காற்றின் ஒட்டுமொத்தத் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை மேலும் குறையும்: இந்நிலையில், தில்லி, என்சிஆா் பகுதிகளில் ஜனவரி 13, 14 தேதிகளில் மீண்டும் மழை பெய்யும் என தனியாா் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமேட்டின் துணைத் தலைவா் மகேஷ் பலாவாட் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.