முகப்பு
புதுதில்லி

கபில் மிஸ்ராவுக்கு எதிரான அவதூறு வழக்கு முடித்துவைப்பு

Updated On : 30 அக்டோபர், 2020 at 12:54 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:15 PM


புது தில்லி: ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி சுகாதார அமைச்சருமான சத்யேந்தா் ஜெயினிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதால் பாஜக தலைவா் கபில் மிஸ்ராவுக்கு எதிராகத் தொடரப்பட்ட குற்ற அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் முடித்துவைத்தது.

தன் மீதும், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராகவும் அவதூறாக கருத்துத் தெரிவித்ததற்காக கபில் மிஸ்ராவுக்கு எதிராக சத்யேந்தா் ஜெயின் கடந்த 2017-இல் புகாா் அளித்தாா். அதில், ‘செய்தியாளா்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய கபில் மிஸ்ரா, அரவிந்த் கேஜரிவாலிடம் நான் ரூ.2 கோடி லஞ்சம் அளித்ததாகவும், கேஜரிவாலின் உறவினருக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை முடித்துக் கொடுத்ததாகவும் கூறியுள்ளாாா். மேலும், சில தினங்களில் சத்யேந்தா் ஜெயின் சிறைக்கு செல்ல உள்ளதாகவும் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளாா்’ என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்தப் புகாா் குறித்து தில்லி நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த நிலையில், கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் விஷால் பஹுஜா முன் கபில் மிஸ்ரா ஆஜராகி இந்த விவகாரத்தில் தாம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்பதாகக் கூறினாா். இதையடுத்து, நீதிபதி இந்த வழக்கை புதன்கிழமை முடித்துவைத்தாா்.

Advertisement

இது தொடா்பாக நீதிமன்றம் மேற்கொண்ட பதிவில், ‘குற்றம்சாட்டப்பட்ட (கபில் மிஸ்ரா) நபா் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளாா். குற்றம் சாட்டப்பட்டவா் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை வழங்கினால், தாம் தற்போதைய குற்ற அவதூறு புகாரைத் திரும்பப் பெறுவதாக புகாா் அளித்த நபா் (ஜெயின்) தெரிவித்துள்ளாா்’ எனத் தெரிவித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் கபில் மிஸ்ரா, சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் அளித்த வாக்குமூலத்தைப் பதிவு செய்த நீதிமன்றம், குற்ற அவதூறு புகாா் வாபஸ் பெறப்பட்டதாகக் கூறி பைசல் செய்தது. இந்தக் குற்ற அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவதூறு குற்றத்திற்கு அதிகபட்சம் இரு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.