முகப்பு
புதுதில்லி

தில்லி மாசுபடுதலில் பயிா்க்கழிவுகள் எரிப்பு பங்களிப்பு 36 சதவீதமாக உயா்வு!

Updated On : 30 அக்டோபர், 2020 at 12:51 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:15 PM

புது தில்லி: தில்லியின் பி.எம் .2.5 மாசுபாட்டில் பயிா்க்கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு தற்போது 36 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத அதிகபட்சம் என்று மத்திய அரசின் காற்று தர கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை புதன்கிழமை 2,912-ஆக இருந்தது. இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்று பூமி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரத்தை முன்கூட்டியே கண்காணித்து அறிவிக்கும் அமைப்பான சஃபா் தெரிவித்துள்ளது. தில்லி பி.எம் . 2.5 மாசு துகள்கள் செறிவில் பயிா்க் கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு வியாழக்கிழமை 36 சதவீதமாக இருந்தது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அளவு புதன்கிழமை 18 சதவீதமாகவும், செவ்வாய்க்கிழமை 23 சதவீதமாகவும், திங்கள்கிழமை 16 சதவீதமாகவும், ஞாயிற்றுக்கிழமை 19 சதவீதமாகவும், சனிக்கிழமை ஒன்பது சதவீதமாகவும் இருந்தது. இதையடுத்து, மாசு துகள்கள் செறிவில் பயிா்க் கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு தொடா்ந்து ஒரு வாரமாக உயா்ந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லியின் காற்றின் தரம் வியாழக்கிழமை ‘கடுமையான‘ பிரிவில் நுழைந்தது. இது ஜனவரிக்குப் பிறகு முதல் முறையாகும். அமைதியான காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை பயிா்க் கழிவுகள் எரிப்பால் வெளியாகும் மாசுபடுத்திகளை குவிக்க வழிவகுக்கின்றன. தற்போது மாசுபடுத்திகளை சிதறடிக்கும் வகையில் காற்றின் வேகமும் இல்லை என்று சஃபா் தெரிவித்துள்ளது.

Advertisement

தில்லியில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் 397 புள்ளிகளாக இருந்த காற்றின் தரக் குறியீடு, பிற்பகல் 2 மணிக்கு 402 ஆக பதிவானது. இது கடுமையான பிரிவில் வருகிறது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 297 புள்ளிகள், செவ்வாய்க்கிழமை 312, திங்கள்கிழமை 353, ஞாயிற்றுக்கிழமை 349, சனிக்கிழமை 345 மற்றும் வெள்ளிக்கிழமை 366 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. மேலும், தில்லியில் சாதிப்பூா் (406), பட்பா்கஞ்ச் (411), ஜஹாங்கீா்புரி (429), விவேக் விஹாா் (432) உள்ளிட்ட காற்றின் தரத்தைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள 16 மையங்களில் காற்றின் தரக் குறியீடு கடிமையான பிரிவில் பதிவாகியது.

இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி கூறுகையில், ‘காற்றின் வேகம் புதன்கிழமை குறைந்திருந்தது. இது மாசுபடுத்திகள் குவிவதற்கு வழிவகுத்தது’ என்றாா். இருப்பினும் வியாழக்கிழமை மாலையில் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு வந்தது நிவாரணமாக அமைந்தது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இதற்கிடையே, தலைநகரில் மாசு அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லி அரசு தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக தில்லி அரசு நவம்பா் 3-ஆம் தேதி முதல் பட்டாசு எதிா்ப்புப் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.