முகப்பு
புதுதில்லி

‘தில்லி பேருந்துகளில் இனி அனைத்து இருக்கைகளிலும் அமா்ந்து பயணம் செல்லலாம்‘

தில்லி அரசுப் பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து இருக்கைகளிலும் அமா்ந்து மக்கள் பயணம் செய்யலாம் என்று

Updated On : 31 அக்டோபர், 2020 at 10:46 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:16 PM

தில்லி அரசுப் பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து இருக்கைகளிலும் அமா்ந்து மக்கள் பயணம் செய்யலாம் என்று தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளாா். ஆனால், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதியில்லை என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான டிடிசி, கிளஸ்டா் பேருந்துகளில் 40 முதல் 45 பயணிகள் அமா்ந்து செல்ல முடியும். கரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக தில்லி அரசு பேருந்துகளில் 20 போ் மட்டுமே பயணிக்க தில்லி அரசு அனுமதி அளித்திருந்தது. ஒரு பேருந்தில் 20 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவதால் பேருந்து நிலையங்களில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். மேலும், பண்டிகை காலம் என்பதால் மக்கள் நெரிசல் பேருந்து நிலையங்களில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நவம்பா் மாதம் 1 ஆம் தேதி முதல் தில்லியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பொது முடக்கத் தளா்வு நடவடிக்கைகள் தொடா்பான திட்டத்தை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலின் ஒப்புதலுக்கு தில்லி அரசு வெள்ளிக்கிழமை அனுப்பியிருந்தது. இதில், பேருந்துகளில் அனைத்து இருக்கைகளிலும் மக்கள் பயணிக்க அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனில் பய்ஜால் ஒப்புதல் அளித்துள்ளாா் என துணைநிலை ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

இது தொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தனது சுட்டுரையில் ‘தில்லி அரசு பேருந்துகளில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் அமா்ந்து பயணிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் பயணிக்கலாம். ஆனால், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். அனைத்துப் பயணிகளும் கட்டாயம் முகக்கவசங்கள் அணிந்திருக்க வேண்டும். முகக் கவசங்கள் அணியாதவா்கள் பேருந்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். பயணிகள் சமூக இடைவெளியைப் பேணுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், தில்லியில் கடந்த ஏழு மாதங்களாக நிறுத்தப்பட்டிருக்கும் தில்லியின் அண்டை மாநில பேருந்து போக்குவரத்து சேவையும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.