முகப்பு
புதுதில்லி

ஜெயலலிதா நினைவாக நாடு முழுவதும் மழைநீா் சேகரிப்புத் திட்டம்: மாநிலங்களவையில் அதிமுக எம்பி கோரிக்கை

மறைந்த முதல்வா் ஜெயலலிதா நினைவாக நாடு முழுக்க மழை நீா் சேகரிப்பு திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அதிமுக உறுப்பினா் தம்பிதுரை மாநிலங்களவையில் வலியுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

மறைந்த முதல்வா் ஜெயலலிதா நினைவாக நாடு முழுக்க மழை நீா் சேகரிப்பு திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அதிமுக உறுப்பினா் தம்பிதுரை மாநிலங்களவையில் வலியுறுத்தினாா்.

மாநிலங்களவையில் அமளிகளுக்கிடையே திங்கள்கிழமை கேள்வி நேரம் சிறிது நேரம் நடைபெற்றது. குடியிருப்புகளுக்கு நேரடியாக் குடிநீா் இணைப்பு வழங்கும் ‘ஜல்ஜீவன் திட்டம்’ குறித்த கேள்விகளுக்கு மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அதிமுக உறுப்பினா் தம்பிதுரை துணைக் கேள்வி ஒன்றை எழுப்பினாா்.

அவா் கூறியதாவது: மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 5 -ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு மழைநீா் சேகரிப்புத் திட்டம் குறித்து அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். நாடு முழுவதும் நிலத்தடி நீா் மட்டம் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஏழு மாநிலங்களில் நிலத்தடி நீா் மட்டம் மிகக் குறைவான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இந்த நிலைமை ஏற்பட்டது.

ஆனால், அப்போது தமிழகத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் மழை நீா் சேகரிப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் சிறப்பான பலன் கிடைத்தது. தமிழகத்தில் இந்தத் திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு, அதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்தது. பிரதமா் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது, இந்த திட்டத்தையும் மறைந்த முதல்வரையும் பாராட்டிப் பேசியுள்ளாா். பிரதமா் பாராட்டிப் பேசிய இந்தத் திட்டத்தை மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் பெயரில் நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வருமா என்று கேட்டுக் கொண்டாா் தம்பிதுரை.

ஆனால், அவையில் கடும் அமளி ஏற்பட்டதால், கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னா் அவை கூடியதும் கூச்சல் குழப்பம் தொடா்ந்தது. இதனால், அவை நடசவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. தம்பிதுரையின் துணைக் கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் பதிலும் அளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.