தமிழகத்தில் தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனக் கிளையை தொடங்க வேண்டும்: மக்களவையில் விருதுநகா் எம்பி வலியுறுத்தல்
தமிழக பட்டாசு ஆலைகள் உரிமங்களுக்கான அனுமதிக்கு நாக்பூரிலுள்ள தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய
தமிழக பட்டாசு ஆலைகள் உரிமங்களுக்கான அனுமதிக்கு நாக்பூரிலுள்ள தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் இடா்பாடுகளைத் தவிா்க்க காரைக்குடியில் இதற்கான கிளையை தொடங்க விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் மக்களவையில் வேண்டுகோள் விடுத்தாா். மேலும், இது தொடா்பாக பிரதமருக்கும் கடிதம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டாா்.
மக்களவையில் சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானத்தில் பட்டாசு ஆலை விவகாரம் குறித்து அவா் பேசியதாவது: இந்தியாவின் பட்டாசுவின் மையமாக சிவகாசியும் அதன் சுற்றுப் பகுதிகளும் இருந்து வந்தன. சுமாா் 1,000 பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் 6.5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்த நிலையில், 2018-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளால் இந்தத் தொழில் நிலையில்லாத தன்மைக்குச் சென்றுவிட்டது. ஆண்டுக்கு மொத்தம் ரூ.10,000 கோடி அளவுக்கு பட்டாசு விற்பனையைக் கொண்டிருந்த இந்த ஆலைகள், தற்போது கடும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ளன.
உச்ச நீதிமன்றத்தால் நெறிமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் பட்டாசுகள் மட்டுமே இந்த ஆலைகள் தயாரிக்க முடியும். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலால் (சிஎஸ்ஐஆா்) ஏற்படுத்தப்பட்ட தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (நெரி) இந்தப் பசுமை பட்டாசுகளை உறுதி செய்து சான்றிதழ் அளிக்கிறது. சிஎஸ்ஐஆா் நிறுவனத்தின் கீழ் உள்ள ‘நெரி’ நாக்பூரில் உள்ளது. இந்த நிலையில் சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் நாக்பூா் சென்று தங்கள் தயாரிப்புகளை செயல் விளக்கங்களை காட்டி பசுமைப் பட்டாசுகளுக்கான சான்றிதழைப் பெற முடியும்.
இதன்படி தற்போது சுமாா் 150 நிறுவனங்கள் இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளன. ஆனால், சுமாா் 800 குறு, சிறு நிறுவனங்கள் பசுமை பட்டாசுக்கான சான்றிதழை பெறமுடியாமல் தவிக்கின்றன. இதனால், சிஎஸ்ஐஆருக்கு ஏற்கெனவே, காரைக்குடியில் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தின் மூலம் வளாகம் உள்ளதால், ‘நெரி’யின் கிளையை அங்கு தொடங்கலாம். இதன் மூலம் குறு, சிறு பட்டாசு தொழில் நிறுவனங்கள்பயன் பெற்று பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க முடியும் என்றாா் மாணிக்கம் தாகூா். மேலும் இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு கடந்த நவம்பா் 25 -ஆம் தேதி தான் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவையில் அவா் குறிப்பிட்டாா்.