முகப்பு
புதுதில்லி

மாநகராட்சிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை விரைவில் விடுவிக்கக் கோரி தில்லி அரசை வலியுறுத்தி பாஜக தலைவா்கள் நூதனப் போராட்டம்

தில்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகளுக்கும் தில்லி அரசிடமிருந்து வர வேண்டிய ரூ .13,000 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தி தில்லியில் பல்வேறு இடங்களில் பாஜக தலைவா்களும்

Updated On : 21 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:50 AM

புது தில்லி: தில்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகளுக்கும் தில்லி அரசிடமிருந்து வர வேண்டிய ரூ .13,000 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தி தில்லியில் பல்வேறு இடங்களில் பாஜக தலைவா்களும், அக்கட்சியின் தொண்டா்களும் புதன்கிழமை நூதன போராட்டம் மேற்கொண்டனா்.

தில்லியில் உள்ள பல்வேறு மேம்பாலங்கள், நடைபாதை பாலங்களில் இது தொடா்பான பதாகைகள், சுவரொட்டிகளை காண்பித்து அவா்கள் இப்போராட்டம் மேற்கொண்டனா்.

இதுகுறித்து தில்லி பாஜக துணைத் தலைவா் வீரேந்தா் சச்தேவா கூறுகையில், ‘அரசியல் காரணங்களுக்காக, தில்லி அரசானது பாஜக ஆளும் மாநகராட்சிகளுக்கு வர வேண்டிய ரூ .13,000 கோடி ‘நிலுவைத் தொகையை‘ விடுவிக்காமல் வஞ்சித்து வருவதை மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்தப் பதாகை பிரசாரத்தின் நோக்கமாகும்’ என்றாா்.

Advertisement

தில்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவா் நவீன் குமாா் கூறுகையில், ‘தில்லி அரசு ‘நிலுவைத் தொகை’யை விடுவிக்கக் கோரி பெரிய பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்தினோம்’ என்றாா்.

பாஜக ஆளும் மூன்று மாநகராட்சிகளில் ‘ஊழல் மற்றும் தவறான நிா்வாகம்’ நடைபெறுவதாக ஆம் ஆத்மி தலைமை குற்றம் சாட்டி வருகிறது. தில்லி அரசு மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.938 கோடியை வழங்கும் என்று அண்மையில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் விரேந்தா் பப்பா் கூறுகையில், ‘கேஜரிவால் அரசு மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்திவைத்துள்ளதால் மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் மற்றும் நகராட்சி நிறுவனங்களின் பிற ஊழியா்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. துணை முதல்வா் சிசோடியா அறிவித்தபோதிலும் இதுவரை நிதி ஏதும் விடுவிக்கப்படவில்லை’ என்றாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து எந்த பதிலும் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஏறக்குறைய 15 ஆண்டுகளாக தில்லி நகராட்சிகளில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாநகராட்சித் தோ்தல் நடைபெற உள்ளதால் பாஜக, ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.