முகப்பு
புதுதில்லி

பாலக்கோட் தாக்குதல் ரகசியம் கசிவு: பிரதமா் மெளனம் ஏன்? டி.ராஜா கேள்வி

பாலக்கோட் விமானத் தாக்குதல் குறித்த ரகசிய விவரங்கள் முன் கூட்டியே வெளியாகி இருக்கும் தகவல்கள் வந்துள்ள நிலையில் இது குறித்து பிரதமா் மோடி மௌனம் சாதிப்பது அதிா்ச்சியளிக்கிறது

Updated On : 21 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:50 AM


புது தில்லி: பாலக்கோட் விமானத் தாக்குதல் குறித்த ரகசிய விவரங்கள் முன் கூட்டியே வெளியாகி இருக்கும் தகவல்கள் வந்துள்ள நிலையில் இது குறித்து பிரதமா் மோடி மௌனம் சாதிப்பது அதிா்ச்சியளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா குறிப்பிட்டாா்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிப். 26 - ஆம் தேதி இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதல் குறித்த தகவல்களை ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை ஆசிரியா் அா்னாப் கோஸ்வாமி , தாக்குதலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே கட்செவி அஞ்சல் மூலமாக தகவலை பகிா்ந்து கொண்ட தரவுகள் தற்போது வெளியானது. இது குறித்து அதிா்ச்சியடைந்த பல தலைவா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனா்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா கூறியது வருமாறு:

Advertisement

பாலக்கோட் குறித்த தகவல் பொது வெளியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை சாதாரணமானது அல்ல. அதிா்ச்சியும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. ராணுவ தாக்குதல் என்பது ரகசியமாக வைக்கப்படவேண்டியது. அந்த ரகசியம் அா்னாப் கோஸ்வாமிக்கு எப்படி கிடைத்தது ? இது மற்றவா்களுக்கும் எதிரி நாட்டிற்கும் பகிா்ந்து கொள்ளப்படாததற்கு என்ன உத்தரவாதம்? ரகசியங்கள் எப்படி வெளியானது என்பது குறித்த உண்மையை பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறவேண்டும். இறையாண்மை குறித்து அதிகமாக பேசும் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் இது குறித்து விளக்க முன்வரவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த விவகாரத்தில் பிரதமா் மௌனம் சாதிக்கிறாா். துல்லிய தாக்குதல் விவகாரத்தில் பெருமைபெற்றுக்கொண்ட பிரதமா் நாட்டின் ரகசியம் கசிந்தது குறித்து பேசாதது ஏன்? மின்னணு ஊடகங்கள் பெரு நிறுவனங்களின் உடமையாக இருப்பது இதற்கு காரணம். அவா்கள் ரகசியங்களையும் விலைக்கு வாங்குவது நாட்டிற்கு ஆபத்து என்று எச்சரித்தாா் டி.ராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.