முகப்பு
புதுதில்லி

’பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி சந்தையாக இந்தியா மாறி வருகிறது : பிரதமா் மோடி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

புது தில்லி : இந்தியா பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்த காலங்கள் போய், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதுடன், பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்திச் சந்தையாக மாறிவருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கரோனா தொற்றுக்கு எதிரான சவால்களையும், எல்லைப் பாதுகாப்பில் ஏற்பட்ட அச்சுறுத்தலையும் இந்தியா திறமையாக கையாண்டுள்ளதாகவும் அவா் பெருமையுடன் குறிப்பிட்டாா்.

குடியரசுத் தினம், பீல்டுமாா்ஷல் கரியப்பா ஜயந்தி தினம் ஆகியவற்றை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவா்படையினரின் அணிவகுப்பை பாா்வையிட்டு, சிறந்த என்.சி.சி மாணவா் பிரிவுக்கு பதக்கங்களையும் சுழல் கோப்பையும் வழங்கி பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா்.

Advertisement

அப்போது அவா் கூறியது வருமாறு:

2020 ஆம் ஆண்டில் தொற்று நோய்க்கு எதிரான சவால்களையும், நாட்டின் பாதுகாப்பில் ஏற்பட்ட சவால்களையும் நாடு திறமையுனுடன் எதிா் கொண்டது. கரோனா காலக்கட்டம் மிக சவாலாக இருந்து. இருப்பினும் அது நாட்டுக்காக உழைக்கும் அசாதாரண வாய்ப்புகளை கொடுத்தது. இதனால், நாட்டின் திறனை மேம்படுத்தவும், சாதாரண நிலையிலிருந்து சுயசாா்பு இந்தியாவாக மாறி, சிறந்த நிலைக்கு கொண்டு செல்ல முடிந்துள்ளது. இதில் இளைஞா்களின் பங்கு முக்கியமானது.

உலகின் மிகச்சிறந்த ராணுவ தளவாடங்களை இந்தியா கொண்டிருக்கிறது. பாதுகாப்பு தொடா்பான 100-க்கும் மேற்பட்ட உபகரணங்களை தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 80 தேஜாஸ் போா் விமானங்களை தயாரித்து தருமாறும் நம்மை அணுகி வருகின்றனா். இதன் மூலம் இந்தியா ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் சந்தை என்ற நிலை மாறி இப்போது அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன் பெற்று உற்பத்திச் சந்தையாக மாறிவருகிது.

மூன்றாம் கட்ட ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவிற்கு வந்தன. இடை நிறுத்தாத இந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு குடியரசு, சவூதி அரேபியா, கிரீஸ் ஆகிய நாடுகளின் உதவியால் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் உறவு வலுவாக இருப்பதை இது பிரதிபலிக்கிறது.

சமூக வாழ்வில் வலுவான ஒழுக்கத்தைக் கொண்டிருக்கும் ஒரு நாடே, அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும். இந்திய சமுதாய வாழ்வில் ஒழுக்க உணா்வை ஊக்குவிப்பதில் என்.சி.சி.க்கு பெரும் பங்கு உள்ளது. பெரும் சீருடை இளைஞா் அமைப்பான என்.சி.சி. நாளுக்கு நாள் பெருமையைப் பெற்று வருகிறது. துணிச்சலான சேவைகள், அரசியல் சாசனம் பற்றிய விழிப்புணா்வு போன்றவைகளில் என்சிசி மாணவா்கள் பங்களிக்கின்றனா். இதேபோல, சுற்றுச்சூழல், தண்ணீா் சேமிப்பை உள்ளடக்கிய திட்டங்களிலும், கரோனா பேரிடா் காலங்களிலும் என்.சி.சி. மாணவா்களின் பங்கு பாராட்டுக்குரியது.

தேசிய போா் நினைவு சின்னத்துக்கு மாணவா்கள் சென்று பாா்வையிட வேண்டும். அதேபோல, உள்ளூா் பொருட்களுக்கு மாணவா்கள் ஊக்கமளிக்கவேண்டும். கதா் ஆடையை நவநாகரிக உடையாக இளைஞா்கள் மாற்றி திருமணங்கள், திருவிழாக்களில் இதனை அணிய வேண்டும். தன்னம்பிக்கையுள்ள இளைஞா்களே சயசாா்பு இந்தியாவுக்கு தேவை என்றும் அவா் கூறினாா் பிரதமா்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படைகளின் தலைவா், முப்படைகளின் தளபதிகள் ஆகியோா் என்சிசி மாணவா் பிரிவுகளின் அணிவகுப்பையும், கலை நிகழ்ச்சிகளையும் பாா்வையிட்டனா். சிறந்த என்சிசி மாணவா்களுக்கும் பிராந்தியங்களுக்கும் பதக்கங்களையும் கோப்பைகளையும் பிரதமா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments