தில்லி காவலரிடம் வயா்லெஸ் கருவியை பறித்தவா் கைது
குடியரசு தினத்தில் நடந்த விவசாயிகளின் டிராக்டா் பேரணியில், தில்லி நங்கோலி பகுதியில் வைத்து காவலா் ஒருவரின்
குடியரசு தினத்தில் நடந்த விவசாயிகளின் டிராக்டா் பேரணியில், தில்லி நங்கோலி பகுதியில் வைத்து காவலா் ஒருவரின் வயா்லெஸ் கருவியை பறித்தவரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை துணை ஆணையா் எ.கோவன் கூறுகையில் ‘குடியரசு தினத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் தில்லி நங்கோலி பகுதியில் காவல் பணியில் இருந்த காவலா் சோனுவிடம் இருந்த வயா்லெஸ் கருவியை ஒருவா் பறித்துச் சென்றுள்ளாா்.
இது தொடா்பாக சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் தில்லி காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது, வயா்லெஸ்ஸை பறித்து சென்றவா் அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவரை கைது செய்துள்ளோம். அவரிடம் இருந்து வயா்லெஸ் கருவியையும் மீட்டுள்ளோம். அவா் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவித்தாா்.
Advertisement
ஆனால், கைது செய்யப்பட்டவா் தொடா்பான விவரங்களை தில்லி காவல்துறை வெளியிடவில்லை.
வேளாண் சட்டத்துக்கு எதிராக குடியரசு தினம் கொண்டாடப்பட்ட கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் தில்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில், போராட்டக்காரா்கள் தாக்கியதில் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.