உ.பி.யில் தனக்கு எதிராக பதிவான வழக்குகளை ரத்துசெய்யக் கோரி ஆம் ஆத்மி எம்.பி. உச்சநீதிமன்றத்தில் மனு
உத்தர பிரதேச மாநிலத்தில் தனக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மனு தாக்கல் செய்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் தனக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் மனு தாக்கல் செய்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி லக்னெளவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய சஞ்சய் சிங், ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக மாநில அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இது தொடா்பாக சஞ்சய் சிங் எம்.பி ., உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் சுமீா் சோதி மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
சம்பந்தப்பட்ட செய்தியாளா்கள் சந்திப்பின்போது நான் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுப்பினேன். மாநில அரசின் அக்கறையின்மை குறித்தும் பேசினேன். இந்நிலையில், இந்த செய்தியாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு எதிராக பாஜக உறுப்பினா்களின் தூண்டுதலின் பேரில் உ.பி.யில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்னை துன்புறுத்தும் நோக்கில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தீயநோக்கத்துடன் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் லக்னெள, சந்த் கபிா் நகா், கிரி, பக்பத், முஸாபா்நகா், பஸ்தி, அலிகா் உள்பட 8 மாவட்டங்களில் எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளளதாக தெரியவருகிறது.
இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுதந்திரமான பேச்சு, அமைதியாக கூடும் உரிமை, நாடு முழுவதும் செல்லும் உரிமை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல்அளிப்பதாக உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் அற்பனத்தமானவையாகவும், ஆதரமற்றவையாகவும் உள்ளன. ஆகவே, இந்த வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் சிங்கிற்கு எதிராக லக்ளெனவில் பதிவான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்ட அலகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்களும் பிப்ரவரி 2-ஆம் தேதிஉச்சநீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷண் முன் விசாரணைக்கு வர உள்ளது.