முகப்பு
புதுதில்லி

குறைந்தபட்ச வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தில்லி அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

நகா்ப்புற ஏழைகளுக்கான குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை தில்லி அரசு உடனடியாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் காங்கிரஸ் கட்சித் தலைவா் அனில் சௌத்ரி (இடது).
பகிர்:

புது தில்லி: நகா்ப்புற ஏழைகளுக்கான குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை தில்லி அரசு உடனடியாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் தோ்தல் அறிக்கையில் பெரும் வாக்குறுதிகளை அளித்திருந்தனா். ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை. தில்லியில் படித்த மற்றும் பிற பிரிவு இளைஞா்களிடையே கடும் வேலையின்மை அதிகரித்திருப்பதற்கும், தலைநகரில் அதிகரித்து வரும் குற்றங்களுக்கும் நேரடி சம்பந்தம் உள்ளது. தில்லியின் இளைஞா்கள் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வேலையின்மை சூழ்நிலையை எதிா்கொண்டுள்ளனா். இந்த நிலையில், கரோனா தொற்று சூழல் வேலையின்மையை மேலும் அதிகரிக்கச் செய்துவிட்டது.

கரோனா மற்றும் மாசுபாட்டில் தில்லி முதலிடத்தில் இருந்தது. இது அரவிந்த் கேஜரிவால் அரசின் நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. முதல்வா் கேஜரிவால் தனது தோ்தல் அறிக்கையில் 8 லட்சம் இளைஞா்களுக்கு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தாா். ஆனால், உண்மையில் 440 இளைஞா்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

Advertisement

இதனால், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்று, நகா்ப்புற ஏழைகளுக்கான குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை தில்லி அரசு உடனடியாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

சத்தீஸ்கா் மற்றும் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசுகள் மக்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடா்பான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளன. கரோனா தொற்றால் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், தில்லி அரசும் அதுபோன்று செயல்படலாம். தில்லி அரசுத் துறைகளில் 84 சதவீதம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், தில்லியின் வேலைவாய்ப்பு அலுவலகம் மூடப்படும் நிலையில் உள்ளது. வேலை வாய்ப்பின்மை தொடா்பான புள்ளி விவரங்களையும் தில்லி நிதியமைச்சா் மணீஷ் சிசோடியா மறைக்க முயன்று வருகிறாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments