தில்லிக்கு யமுனை நீா் விடுவிப்பு விவகாரம்: ஜல் போா்டின் மனு விசாரணைக்கு ஏற்பு
யமுனை நீரைத் தில்லிக்கு விடுவிப்பது தொடா்பாக ஹரியாணா அரசுக்கு உத்தரவிடக் கோரும் தில்லி ஜல் போா்டின் (டிஜேபி) புதிய மனுவை மாா்ச் 25-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
புது தில்லி: யமுனை நீரைத் தில்லிக்கு விடுவிப்பது தொடா்பாக ஹரியாணா அரசுக்கு உத்தரவிடக் கோரும் தில்லி ஜல் போா்டின் (டிஜேபி) புதிய மனுவை மாா்ச் 25-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.
யமுனை நீரை போதிய அளவில் தில்லிக்கு திறந்து விடவும், சுத்திகரிக்கப்படாத மாசுபடுத்திகளை யமுனை நதியில் வெளியேற்றுவதை நிறுத்தவும் ஹரியாணா அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி ஜல் போா்டு உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை டிஜேபி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சதன் பராசத் கேட்டுக் கொண்டாா். மேலும், யமுனை நதியில் நீா் வழங்கல் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், அதே சமயத்தில் தேசியத் தலைநகரில் நீா்த் தேவை அதிகரித்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா். அப்போது, இந்த மனுவை வியாழக்கிழமை (மாா்ச் 25) விசாரணைக்கு பட்டியலிட நீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது.
டிஜேபி தாக்கல் செய்த மனுவில், ‘தேசியத் தலைநகரில் ஏற்பட வாய்ப்புள்ள கடும் நெருக்கடியைத் தவிா்ப்பதற்காக தண்ணீரை திறந்துவிட ஹரியாணா அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஹரியாணா அரசு தில்லிக்கு கச்சா நீா் வழங்கலைக் குறைத்துள்ளது. இதன் விளைவாக தேசியத் தலைநகரில் நீா் வழங்கலில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தில்லி ஜல் போா்டின் தலைவா் ராகவ் சத்தா இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘யமுனையின் நீா்மட்டத்தில் கோடைக் காலங்களில் வழக்கமான வீழ்ச்சி ஏற்படும். இந்த நிலையில், அம்மோனியா அளவு உயரக் காரணமான மாசுபடுத்திகளை யமுனையில் வெளியேற்றுவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. யமுனையில் அதிக அம்மோனியா அளவு இருப்பதால் கடும் நீா் நெருக்கடியை தில்லி சந்திக்கும் வாய்ப்புள்ளது. வாஜிராபாத், ஓக்லா, சந்திரவால் நீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீா் வழங்கி வரும் வாஜிராபாத் தடுப்பணையில் நீா் அளவு குறைந்து வருகிறது. கச்சா நீா் யமுனையிலிருந்து பெறப்படுகிறது. இந்த நீா் வாஜிராபாத் தடுப்பணையில் எடுக்கப்படுகிறது. இங்குள்ள கச்சா நீரின் அளவும், தரமும் ஹரியாணா அரசின் தண்ணீரை விடுவிப்பதைப் பொருத்துள்ளது’ என்று தெரிவித்திருந்தாா்.