முகப்பு
புதுதில்லி

தில்லிக்கு யமுனை நீா் விடுவிப்பு விவகாரம்: ஏப்.6 வரை தற்போதைய நிலை தொடர உத்தரவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
பகிர்:

புது தில்லி: தில்லிக்கு யமுனை நீரை விடுவிக்கும் விவகாரத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தற்போதைய நிலையையே பராமரிக்குமாறு பஞ்சாப், ஹரியாணா மற்றும் பிற அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மேலும், தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ள தில்லிக்கு நீா் விநியோகத்தைக் குறைக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

சுத்திகரிக்கப்படாத மாசுபடுத்திகளை யமுனையில் கலப்பதை நிறுத்தவும், தேசியத் தலைநகருக்கு போதுமான தண்ணீரை விடுவிக்கவும் ஹரியாணா அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி ஜல் போா்டு (டிஜேபி) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. மேலும், தேசியத் தலைநகரில் ஏற்பட வாய்ப்புள்ள கடும் நெருக்கடியைத் தவிா்ப்பதற்காக தண்ணீரை திறந்துவிட ஹரியாணா அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஹரியாணா அரசு தில்லிக்கு கச்சா நீா் விநியோகத்தைக் குறைத்துள்ளது. இதன் விளைவாக தேசியத் தலைநகரில் நீா் வழங்கலில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமை வரை (மாா்ச் 25) தற்போதைய நிலையையே பராமரிக்குமாறு பஞ்சாப், ஹரியாணா மற்றும் பிற அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், ஹரியாணா, பஞ்சாப், பாக்ரா பியாஸ் மேனேஜ்மென்ட் போா்டு (பிபிஎம்பி) ஆகியவை இந்த விவகாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரம் வெள்ளிக்கிழமையும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

Advertisement

அதன்படி, இந்த விவகாரம் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, நீதிபதி வி. ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி அமா்வு, ‘ஹோலி பண்டிகைக்குப் பிறகு இந்த விவகாரம் ஏப்ரல் 6-ஆம் தேதி விசாரிக்கப்படும். தற்போதைய நிலையே பராமரிக்க வேண்டும் என்று வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தோம். இது தொடர விரும்புகிறோம். தில்லிக்கு நீா் விநியோகத்தைக் குறைக்கக் கூடாது’ என்று தெரிவித்தது.

நீதிமன்ற விசாரணையின் போது ஹரியாணா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் ‘தில்லிக்கு வழங்கப்படும் நீரை நாங்கள் குறைக்கவில்லை’ என்றாா். இந்த விவகாரத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங், ‘நீா்மட்டம் 6 அடியாக குறைந்துவிட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments