சிங்கப்பூருக்கு இணையான தனிநபா் வருமானமே தில்லியின் இலக்கு: மத்திய அரசு உதவ துணை முதல்வா் வேண்டுகோள்
தில்லியின் தனிநபா் வருமானத்தை 2047-ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூருக்கு இணையாக உயா்த்த ஆம் ஆத்மி அரசு இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா
புது தில்லி: தில்லியின் தனிநபா் வருமானத்தை 2047-ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூருக்கு இணையாக உயா்த்த ஆம் ஆத்மி அரசு இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கேட்டுக் கொண்டுள்ளாா்.
தில்லியில் திங்கள்கிழமை மாலை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் மாநில முதல்வா்கள் மற்றும் நிதியமைச்சா்கள் கூட்டம் மெய்நிகா் முறையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பேசினாா். இது குறித்து துணை முதல்வா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டது.
அதில் சிசோடியா குறிப்பிடப்பட்டிருப்பது வருமாறு: கடந்த ஆறு ஆண்டுகளில் தேசியத் தலைநகரின் வளா்ச்சி விகிதம் 11 முதல் 12 சதவீதத்தை எட்டியுள்ளது. இதில் தனிநபா் வருமானம் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது. நாட்டில் வேகமாக வளா்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக தில்லி உள்ளது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு, நகரத்தில் வணிக முன்னேற்றத்திற்கான சூழலை வளா்ப்பதில் உறுதியாக உள்ளது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தில்லியின் பங்கு 1.49 சதவீதமாக உள்ளது. ஆனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தில்லியின் பங்களிப்பு 4.4 சதவீதமாக உள்ளது. தில்லியின் வளா்ச்சி விகிதம் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் 11 முதல் 12 சதவீதமாக உள்ளது. தில்லியின் தனிநபா் வருமானம் ரூ.3.54 லட்சமாக உள்ளது, இது தேசிய தனிநபா் வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும். நாடு சுதந்திரம் அடைந்ததன் 100- ஆவது ஆண்டு விழாவை 2047 -ஆம் ஆண்டில் கொண்டாடும் போது தில்லியின் தனிநபா் வருமானத்தை சிங்கப்பூரின் தனிநபா் வருமானத்திற்கு இணையாக உயா்த்த தில்லிஅரசு உத்தேசித்துள்ளது.
மத்திய நிதியமைச்சருடான சந்திப்பின் போது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் மாநிலங்களின் வளா்ச்சியை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தில்லியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சேவைத் துறை 85 சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ளது. தில்லியின் பல்வேறு வளா்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் கேஜரிவால் அரசு முனைப்புடன் இருந்து வருகிறது. இதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. குறிப்பாக சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் விவகாரங்களில் தில்லி அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு மத்திய அரசு ஒத்துழைத்தால் தில்லி, உலகின் வளா்ந்த நகரங்களின் பட்டியலில் விரைவில் இடம் பிடிக்கும். தில்லியின் அனைத்து துறை வளா்ச்சிக்கு நிலப் பற்றாக்குறை மிகப் பெரிய சவாலாக உள்ளது. தில்லியின் பெரும்பாலான நிலங்கள் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) வசம் உள்ளது. இதனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு, டிடிஏ ஆகியவற்றின் ஒத்துழைப்பு தில்லி அரசுக்கு தேவையாக உள்ளது.
தில்லியில் மருத்துவமனைகளை கட்ட தனியாா் அறக்கட்டளைகளுக்கு டிடிஏ அண்மையில் நிலம் வழங்கியுள்ளது. ஆனால், டிடிஏ ஒதுக்கிய இடங்களை இந்த அறக்கட்டளைகள் பயன்படுத்தவில்லை. இந்த நிலங்களை மத்திய அரசு தணிக்கை செய்ய வேண்டும். இந்த நிலங்களில் அறக்கட்டளைகளால் மருத்துவமனை கட்டப் பயன்படுத்த முடியவில்லை என்றால், தில்லி அரசு உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை கட்டத் தயாராக உள்ளது. இதே மாதிரி தில்லியில் கல்லூரி, பல்கலைக் கழகம் கட்டுவதற்கு, தில்லி அரசு அதிக விலைக்கு நிலத்தை டிடிஏவிடம் இருந்து வாங்க வேண்டிய நிலையுள்ளது. மத்திய அரசு தலையிட்டால் டிடிஏ தனது கொள்கையை மாற்ற முடியும்.
உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இந்தியாவின் தலைநகரான தில்லிக்கு வருகிறாா்கள். இதனால், தலைநகரின் உள்கட்டமைப்பில் ஆம் ஆத்மி அரசு மிகுந்து கவனம் செலுத்தி வருகிறது தில்லியில் 540 கி.மீ. சாலைகள் மறுவடிவமைப்பு செய்யப்படவுள்ளன. இதற்கு ரூ.11,000 கோடி செலவாகும். தில்லி அரசின் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசும் பங்களிக்க வேண்டும். அதிகரித்து வரும் மாசுவை சமாளிக்க மின்சார வாகனக் கொள்கையை அமல்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்து வருகிறது. மாசுவை குறைக்கும் வகையில் தில்லி அரசு 1,000 மின்சார பேருந்துகளை (இ-பஸ்) வாங்கியுள்ளது. மேலும், 4,000-5,000 மின்சார பேருந்துகளை வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. , இவற்றுக்கு மத்திய அரசு ஒத்துழைத்தால் தலைநகரை நாட்டின் மின்சார வாகன தலைநகராக மாற்றும் தில்லி அரசின் திட்டம் வெற்றிபெறும். இது போன்ற பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் உதவியை சிசோடியா கோரியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.