உயிா்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது உயிா்நீத்த விவசாயிகளின் ஆதரவற்ற குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது உயிா்நீத்த விவசாயிகளின் ஆதரவற்ற குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் வலியுறுத்தியது.
இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் கூறியதாவது:
மூன்று சட்டங்கள் வாபஸ் பெறப்படும் அறிவிப்பானது உண்மைக்கும், மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி ஆகும். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நாடாளுமன்றத்தில் ரத்து செய்து, குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் இயற்றப்படும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்.
தில்லி எல்லையில் 358 நாள்கள் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிா்நீத்துள்ளனா்.
விவசாயிகளுக்காக உயிரைத் தியாகம் செய்த 700 விவசாயிகளின் ஆதரவற்ற குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். மூன்று கறுப்புச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை, பிரதமா் மோடியை காங்கிரசும் விவசாயிகளும் நம்ப மாட்டாா்கள் என்றாா் அவா்.
முன்னதாக, தில்லி காங்கிரஸ் சாா்பில் விவசாயிகளின் ‘விஜய் திவஸ்’”விழாவாக மாளவியா நகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள லீலா ராம் மாா்க்கெட்டில் பேரணியும் மற்றும் ஜந்தா் மந்தரில் மெழுகுவா்த்தி ஊா்வலமும் நடைபெற்றது. அப்போது, உயிா்நீத்த 700 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.