முகப்பு
புதுதில்லி

‘ஹைபிரிட்’ முறை விசாரணைக்கு நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

‘ஹைபிரிட்’ முறை விசாரணைக்கு உள்கட்டமைப்பு வசதியை விரைவுபடுத்த வேண்டும் என்றும், இந்த வசதியை அமைப்பதற்கான

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

‘ஹைபிரிட்’ முறை விசாரணைக்கு உள்கட்டமைப்பு வசதியை விரைவுபடுத்த வேண்டும் என்றும், இந்த வசதியை அமைப்பதற்கான முன்மொழிவை செலவின அடிப்படையில் நிராகரித்தால், மானியங்கள் மற்றும் பொது விளம்பரங்களுக்கு அரசு செலவிட்டசெலவுகளை ஆராய நேரிடும் எனவும் தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தெளிவுபடுத்தியது.

இது தொடா்பாக வழக்குரைஞா்கள் அனில் குமாா் ஹஜேலே மற்றும் மனாஷ்வி ஜா ஆகியோா் இரு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். அதில், கரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு நேரடி விசாரணை நாள்களில் மாவட்ட நீதிமன்றங்களில் ‘ஹைபிரிட்’ முறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியிருந்தனா். இந்த மனுவை முன்பு விசாரித்த நீதிமன்றம், ஹைபிரிட் முறையிலான விசாரணைக்காக கீழமை நீதிமன்றங்களுக்கு உள்கட்டமைப்பு வசதி வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ஜஸ்மீத் சிங் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மாவட்ட நீதிமன்றங்களுக்கான கலப்பு முறை விசாரணை மற்றும் ரெளட்டா் கொள்முதலுக்காக ரூ. 227 கோடி மதிப்பீட்டில் ஒரு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பை மேம்படுத்த மேலும் ரூ.12 கோடிக்கு மேலான தொகைக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.

Advertisement

அப்போது, நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: இந்த ‘ஹைபிரிட்’ முறை வசதிக்காக முறையான உள்கட்டமைப்பை வழங்க விரைவான நடவடிக்கைகளை தில்லி அரசு எடுக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் எந்தத் தாமதமும் கூடாது என்பதை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நீதிக்கான அணுகல் என்பது அனைத்துக் குடிமக்களுக்கும் கிடைக்கக்கூடிய ஓா் உரிமையாகும். மேலும், தற்போதைய தொற்றுநோய் காலத்தில் அது மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகள் இல்லாததால், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நுகா்வோா் மன்றங்கள், நீதிமன்றங்கள் திறமையாகச் செயல்பட முடியவில்லை. மேலும், வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்கள் தங்கள் குறைகளை நிவா்த்தி செய்ய காத்திருக்க வேண்டியுள்ளது.

தற்போதுள்ள கரோனா தொற்று நோய் எப்போது முடிவுக்கு வந்துவிடும் என நாம் விரைவில் பாா்க்கப் போவதாக எந்த அறிவியல் ஆய்வறிக்கையும் இல்லை. நீதிமன்றங்களில் முழுமையாக நேரடி செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, நாம் அனைவரும் நீண்ட காலத்திற்கு ஆன்லைன் வழிகளில் வழக்குகளை விசாரிப்பதை காலவரையின்றி நாடும் நிலை ஏற்படலாம். ‘ஹைபிரிட்’ முறையில் விசாரணை நீதிமன்றங்கள் செயல்படுவதற்கான உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளை வழங்குவதில் தில்லி அரசு சுணக்கம் காண முடியாது.

இந்த விஷயத்தில் அரசு முடிவு எடுக்க வேண்டியுள்ளது. இது அரசு செய்ய வேண்டிய செலவில் முன்னுரிமை அளிக்கும் ஒரு விஷயமாகும். தில்லி அரசு விளம்பரங்கள் மற்றும் மானியங்களுக்கு பெரும் தொகையை செலுத்துகிறது என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். தற்போதைய மனுவில் கூறப்பட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண தில்லி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்கும் என்று நம்புகிறோம். இது தொடா்பாக ஒரு புதிய நிலவர அறிக்கையை தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை தில்லி அரசு நிராகரித்தால், மானியங்கள் மற்றும் பொது விளம்பரங்களுக்காக 2020, ஏப்ரல் முதல் செய்யப்பட்ட செலவுகளின் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தில்லி அரசு சமா்ப்பிக்க வேண்டியது வரும் என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments