முகப்பு
புதுதில்லி

தமிழில் அா்ச்சனை திட்டத்தை எதிா்க்கும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

தமிழகக் கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்தை எதிா்த்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

தமிழகக் கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்தை எதிா்த்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீன் இயங்கும் கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தை எதிா்த்து ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவா் தாக்கல் செய்த பொது நல மனுவை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமா்வு செப்டம்பா் 3-ஆம் தேதி விசாரித்தது. மனுதாரா் தரப்பில் ‘கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது’ என வாதிடப்பட்டது.

Advertisement

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘எந்த மொழியில் அா்ச்சனை செய்வது என்பது பக்தா்களின் விருப்பத்துக்கு உள்பட்ட விஷயம். தமிழில் அா்ச்சனை செய்ய எந்தத் தடையும் இல்லை’ என 2008-ம் ஆண்டு உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை சுட்டிக்காட்டி, ஒரு குறிப்பிட்ட மொழியில்தான் அா்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையைத் துறை ஆணையா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞா் டி.குமணன் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், ‘சம்பந்தப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னா் எங்கள் தரப்பு கருத்தையும் உச்சநீதிமன்றம் கேட்க வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments